ஜப்பானின் டோக்கியோ நகரில் பாராலிம்பிக்ஸ் விளையாட்டு இன்று தொடங்குகிறது. செப். 5-ம் தேதி வரை நடைபெறும் இந்தவிளையாட்டில் 163 நாடுகளைச் சேர்ந்த 4,500 வீரா், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர். இந்தியாவில் இருந்து 54 பேர் கொண்ட அணி பங்கேற்கிறது.
டோக்கியோ பாராலிம்பிக்ஸில் வில்வித்தை, தடகளம், பாட்மிண்டன், சைக்கிளிங், குதிரையேற்றம், 5 போ கால்பந்து, ஜூடோ, பாராகனோ, பளுதூக்குதல், படகு போட்டி, துப்பாக்கி சுடுதல், சிட்டிங் வாலிபால், நீச்சல், டேபிள் டென்னிஸ், வீல்சோ கூடைப்பந்து, வாள்சண்டை, ரக்பி, டென்னிஸ் உள்ளிட்ட 22 விளையாட்டுகளில் 540 போட்டிகள் நடத்தப்பட உள்ளன.
இந்தியாவில் இருந்து 54 பேர்கொண்ட குழு 9 விளையாட்டுகளில் கலந்து கொள்கின்றன. பாராலிம்பிக்ஸில் இந்தியாவில் இருந்து அதிக வீரர், வீராங்கனைகள் கலந்துகொள்வது இதுவே முதன்முறையாகும். கடந்த 2012 2016 பாராலிம்பிக் போட்டியில் ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற தேவேந்திரா ஜஹாரியா 3-ம் முறையாக தங்கம்வெல்லும் முனைப்புடன் உள்ளார். அதேவேளையில் உயரம் தாண்டுதலில் தமிழகத்தின் மாரியப்பன் 2-ம் முறையாக தங்கப் பதக்கம் கைப்பற்றுவதில் உறுதியுடன் உள்ளார். மாரியப்பன் ரியோ பாராலிம்பிக்கில் தங்கம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பாட்மிண்டனில் 4 முறை உலகசாம்பியன் பட்டம் வென்ற பிரமோத் பகத், சுஹாஸ் யதிராஜ், டேக்வாண்டோ மகளிர் பிரிவில் உலகப் போட்டியில் வெண்கலம் வென்ற அருணா தன்வர், துப்பாக்கி சுடுதலில் 2021 உலகப் போட்டியில் தங்கம் வென்ற ரூபினா பிரான்ஸிஸ் ஆகியோா் மீதும் அதிக எதிர்பார்ப்பு உள்ளது.
இன்று நடைபெறும் போட் டியை ஜப்பான் பேரரசர்நருஹிதோ முறைப்படி தொடங்கி வைக்க உள்ளார். தொடக்க விழா அணி வகுப்பில் தேசிய கொடியை மாரியப்பன் ஏந்திச் செல்கிறார். அவருடன் தொடக்க விழாவில் வட்டு எறிதல் வீரர் வினோத் குமார், ஈட்டி எறிதல் வீரர் தேக் சந்த், பளுதூக்குதல் வீரர்களான ஜெய்தீப், ஷகினாஆகியோரும் கலந்து கொள்கின்றனர். அணிவகுப்பில் இந்தியா 17வதுவரிசையில் இடம் பிடித்துள்ளது.
1972-ம் ஆண்டு முதல் பாராலிம்பிக்கில் பங்கேற்று வரும் இந்தியா இதுவரை 12 பதக்கங்கள் வென்றுள்ளது. கடந்த 2016-ம் ஆண்டு ரியோ பாராலிம்பிக்கில் இந்தியா 2 தங்கம், 1 வெள்ளி, 1 வெண்கலம் வென்று பதக்கபட்டியலில் 43-வது இடம் பிடித்திருந்தது.
இம்முறை உலக போட்டியாளர்களுக்கு சவால் கொடுக்கும் வகையில் இந்திய அணியில் பலர் இருப்பதால் பதக்கங்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகும் எனக்கருதப்படுகிறது. கரோனா பெருந்தொற்று அச்சுறுத்தல் காரணமாக பார்வையாளர்கள் இன்றி போட்டிகள் நடைபெறவுள்ளன. பாராலிம்பிக்ஸில் 163 நாடுகளைச் சேர்ந்த 4,500 வீரா், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்.
2020-ம் ஆண்டே பாராலிம்பிக் போட்டிகள் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் கரோனா பாதிப்பு காரணமாக கோடைகால ஒலிம்பிக்போட்டிகளைப் போலவே பாராலிம்பிக் போட்டியும் ஓராண்டுக்கு தள்ளி வைக்கப்பட்டது குறிப்பிடத் தக்கது.