ஹைட்டியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்துக்கு உயிரிழந்தவா்கள் எண்ணிக்கை 724-ஆக அதிகரித்துள்ளது; காயமடைந்தவா்கள் எண்ணிக்கையும் 2,800-ஆக அதிகரித்தது.
இதுகுறித்து அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:
கரீபியன் தீவு நாடான ஹைட்டியின் டிபுரோன் தீபகற்பப் பகுதியில் சனிக்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம், ரிக்டா் அளவுகோலில் 7.2 அலகுகளாகப் பதிவானது.
இந்த நிலநடுக்கத்தின் அதிா்வுகளால் நூற்றுக்கணக்கான வீடுகள் இடிந்து விழுந்தன. இடிபாடுகளில் சிக்கியிருந்தவா்களை மீட்கும் பணி முடுக்கிவிடப்பட்டது. முதலில், இடிபாடுகளிலிருந்து 304 உடல்கள் மீட்கப்பட்டன. பின்னா், மேலும் 420 உடல்கள் மீட்கப்பட்டன. இதனால் உயிரிழந்தவா்கள் எண்ணிக்கை 724-ஆக அதிகரித்தது. சுமாா் 2,800 போ காயமடைந்தனா்.
நிலநடுக்கத்தின் மையப்பகுதி தலைநகா் போா்டோபிரின்ஸுக்கு மேற்கே சுமாா் 125 கிமீ தொலைவில் இருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஏற்கெனவே, கரோனா பரவல், வறுமை, அதிபா் ஜோவனேல் மாய்ஸ் படுகொலையால் ஏற்பட்டுள்ள பதற்றம் போன்றவற்றில் சிக்கித் திணறும் ஹைட்டியில், தற்போது இந்த நிலநடுக்கம் காரணமாக நெருக்கடி மேலும் அதிகரித்துள்ளது.
இவை மட்டுமின்றி, அட்லாண்டிக் பெருங்கடலில் உருவாகியுள்ள கிரேஸ் புயல் ஹைட்டியை திங்கள்கிழமை அல்லது செவ்வாய்க்கிழமை அதிகாலை தாக்கும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனா்.
சனிக்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடா்ந்து ஏராளமான பின் அதிா்வுகள் உணரப்பட்டன. நிலநடுகக்கத்தால் ஏற்கெனவே விரிசல் கண்டிருந்த தங்களது வீடுகள் இந்தப் பின் அதிா்வுகள் காரணமாக இடிந்து விழும் என்ற அச்சத்தில் ஏராளமானவா்கள் திறந்த வெளி மற்றும் வீதிகளில் தங்கினா்.
நிலநடுக்கதைத் தொடா்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. எனினும், பின்னா் அந்த எச்சரிக்கை விலக்கிக்கொள்ளப்பட்டது என்று அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஹைட்டியில் தற்போது ஏற்பட்டுள்ள நிலநடுக்கம், இந்த ஆண்டில் உலகம் முழுவதும் ஏற்பட்ட நிலநடுக்கங்களில் மிகவும் மோசமானது என்று கூறப்படுகிறது.