உலகம்உலகம்செய்திகள்

பருவநிலை மாற்ற அறிக்கை: கடலுக்குள் மூழ்கிக் கொண்டிருக்கும் தீவு நாடுகள் அச்சம்

62views

உலகின் தாழ்வான நாடான மாலத்தீவு பருவநிலை மாற்றத்தால் பெரிதும் பாதிக்கப்படுகிறது

பருவநிலை மாற்றம் குறித்து உரிய நடவடிக்கை உடனடியாக எடுக்கப்பட்டால் தங்களுக்கு கடுமையான பாதிப்பு ஏற்படும் என்று “அழிவின் விளிம்பில் இருக்கும் நாடுகள்” கவலை தெரிவித்துள்ளன.

புவி வெப்பமடைதல் உலகின் சில பகுதிகளை வாழமுடியாததாக மாற்றிவிடும் என்று ஐக்கிய நாடுகள் அவையின் அறிக்கை கூறியதை அடுத்து இந்த நாடுகள் கவலைப்படுகின்றன.

இது உலக விழிப்புணர்வுக்கான அழைப்பு” பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் உள்ளிட்ட உலகத் தலைர்கள் கூறியுள்ளனர்.

ஆனால் அந்த அறிக்கையில் கூறப்பட்டிருக்கும் அம்சங்கள் குறித்து சில கடுமையான எதிர்வினைகள் வந்திருக்கின்றன. பருவநிலை மாற்றத்தால் கடுமையாகப் பாதிக்கப்படும் நாடுகள் இத்தகைய கருத்தைத் தெரிவித்துள்ளன.

“வேறொருவர் வெளியிடும் கார்பனுக்காக நாங்கள் எங்கள் உயிரைக் கொடுக்கிறோம்,” என்று மாலத்தீவின் முன்னாள் அதிபர் முகமது நஷீத் கூறினார். அவர் காலநிலை மாற்றத்தின் விளைவுகளால் பாதிக்கப்படக்கூடிய சுமார் 50 நாடுகளின் பிரதிநிதியாக இருக்கிறார்.

மாலத்தீவு உலகின் தாழ்வான நாடு. அந்த நாட்டின் பல தீவுகள் கடல் மட்டத்தில் இருந்து சில சென்டி மீட்டர் உயரத்திலேயே அமைந்துள்ளன.

ஐபிசிசியின் கணிப்புகள் “அழிவின் விளிம்பில்” அமைந்துள்ள தங்களது நாட்டுக்கு “பேரழிவை ஏற்படுத்தும்” என்று நஷீத் அச்சம் தெரிவித்துள்ளார்.

வெப்ப அலைகள், அதிக மழை மற்றும் வறட்சி மிகப் பரவலாகவும் தீவிரமாகவும் மாறும் என்று ஐபிசிசியின் சமீபத்திய அறிக்கை கூறுகிறது. ஐ.நா.வின் பொதுச் செயலாளர் அதை “மனித குலத்துக்கான சிவப்புக் குறியீடு” என்று அழைக்கிறார்.

பூமியின் வெப்பநிலை அதிகரிப்பதற்கு மனிதர்களே காரணம் என்பதற்கு “தெளிவான” ஆதாரம் இருப்பதாக ஐபிசிசியின் அறிக்கை கூறுகிறது. அடுத்த இரண்டு தசாப்தங்களுக்குள், தொழில் புரட்சிக்கு முந்தைய நிலைகளை விட 1.5 செல்சியஸ் அளவுக்கு வெப்பநிலை உயர வாய்ப்புள்ளது.

இது கடல் மட்டம் அரை மீட்டர் அளவு வரை உயர வழிவகுக்கும், ஆனால் இந்த நூற்றாண்டின் இறுதியில் 2 மீட்டர் உயரம் கூட அதிகரிக்கலாம் என்பதை மறுக்க இயலாது.

இது தாழ்வான நிலப்பரப்பு கொண்ட நாடுகளில் பேரழிவு தரக்கூடிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஆன்டிகுவா மற்றும் பார்படாவின் பிரதிநிதி டயான் பிளாக்-லெய்ன் கூறினார். இவர் சிறு தீவு நாடுகளின் பருநிலை மாற்றம் தொடர்பான பிரதிநிதிகளுள் ஒருவர்.

“அதுதான் எங்களுடைய உண்மையான எதிர்காலம்” என்று பிளாக்-லெய்ன் கவலையுடன் கூறினார்.

பிரிட்டனின் கிளாஸ்கோவில் நடக்க இருக்கும் COP26 என அழைக்கப்படும் ஒரு முக்கிய பருவநிலை உச்சிமாநாட்டுக்கு மூன்று மாதங்கள் இருக்கும் நிலையில் இந்த அறிக்கை வந்திருக்கிறது.

“பருவநிலை மாற்றத்தால் பாதிக்கப்படும் நாடுகளுக்கு உதவி தேவைப்படுகிறது என்பதையே ஐபிசிசியின் அறிக்கை காட்டுகிறது” என்று கிளாஸ்கோ மாநாட்டை நடத்தும் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியிருக்கிறார்.

“ஐபிசியின் அறிக்கை நிதானமான வாசிப்புக்கு உரியது. அடுத்த தசாப்தம் பூமியின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதில் முக்கியமானதாக இருக்கும் என்பது தெளிவாகிறது,” என்று அவர் கூறினார்.

“புவி வெப்பமடைதலைக் கட்டுப்படுத்த என்ன செய்ய வேண்டும் என்பது நமக்குத் தெரியும். நிலக்கரி பயன்பாட்டை முடிவுக்கு கொண்டு வாருங்கள். சுத்தமான எரிசக்தி ஆதாரங்களுக்கு மாறுங்கள். இயற்கையைப் பாதுகாக்க வேண்டும். பாதிப்பின் முன்களத்தில் உள்ள நாடுகளுக்கு பருவநிலை உதவியை வழங்க வேண்டும்” என்று அவர் கேட்டுக் கொண்டார்.

2015 பாரிஸ் ஒப்பந்தத்தின்படி 190 க்கும் மேற்பட்ட நாடுகள் உலக வெப்பமயமாதலை தொழில்துறைக்கு முந்தைய நிலையில் இருந்து கூடுதலாக 2 செல்சியஸ் அல்லது 1.5 செல்சியஸுக்குள் மட்டுப்படுத்த ஒப்புக்கொண்டன.

ஆனால் கார்பன் உமிழ்வு கடுமையாகக் குறைக்கப்படாத வரை, இந்த நூற்றாண்டுக்குள்ளாகவே மேற்கூறிய இரண்டு இலக்குகளும் மீறப்படும் என்று இப்போது வெளியாகி இருக்கும் ஐபிசிசி அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

“பருவநிலை மாற்ற இலக்குகளைப் பின்பற்ற வேண்டுமானால், உலக நாடுகள் தங்களுடைய பொருளாதார முறைகளை அவசரமாக மாற்றியாக வேண்டும்” அமெரிக்காவின் பருவநிலை மாற்றப் பிரதிநிதி ஜான் கெர்ரி கூறினார்.

“இது அவசர நடவடிக்கைக்கான மிக முக்கியமான தசாப்தம். கிளாஸ்கோவில் நடக்க உள்ள COP26 இந்த நெருக்கடியில் ஒரு திருப்புமுனையாக இருக்க வேண்டும்” என்று அவர் தெரிவித்தார்.

COP26 பேச்சுவார்த்தையில் கலந்து கொள்வதாக பருநிலை மாற்ற ஆர்வலர் கிரெட்டா துன்பெர்க் உறுதிப்படுத்தியுள்லார்.

இந்த அறிக்கை “நமக்கு ஏற்கனவே தெரிந்ததை உறுதிப்படுத்துகிறது. நாம் அவசர நிலையில் இருக்கிறோம்” என்று அவர் கூறினார்.

“நாம் இன்னும் மோசமான விளைவுகளைத் தவிர்க்கலாம், ஆனால் இப்போது நடந்து கொண்டிருப்பதே தொடர்ந்தால் அது சாத்தியமல்ல. நெருக்கடியை நெருக்கடி போல் கருதாவிட்டால் எதுவும் நடக்காது” என்று அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

ஐபிசிசி என்றால் என்ன?

1988ல் இந்த அமைப்பு தொடங்கப்பட்டது. பருவநிலை மாற்றம் பற்றிய மதிப்பீட்டை, அதன் தாக்கத்தை, தீர்வுகளைப் பற்றி 6-7 ஆண்டுகளுக்கு ஒரு முறை அரசுகளுக்கு அறிக்கை அளிப்பதற்காக இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது.

பருவநிலை மாற்றம் மற்றும் அதன் ஆபத்துகள் குறித்த ஆதாரங்கள் அதிகரிக்க அதிகரிக்க இந்த அமைப்பின் அறிக்கைகள் கடுமையாக மாறின.

1950ல் இருந்து புவி வெப்பமடைவதற்கு மனிதர்களே முக்கியக் காரணம் என்று 2013ல் வெளியிடப்பட்ட இந்த அமைப்பின் அறிக்கை கூறியது முக்கியத்துவம் பெற்றது. 2015ம் ஆண்டு பாரீஸ் பருவநிலை ஒப்பந்தம் ஏற்படுவதற்கும் இதுவே அடிப்படையாக அமைந்தது.

COP26 நியமன தலைவர் சமீபத்தில் பொலிவியாவுக்கு பயணம் சென்றபோது, கிளாஸ்கோ உச்சி மாநாட்டுக்கு ஆதரவு வழங்குமாறு கேட்டுக் கொண்டார்.

6-7 ஆண்டுகளுக்கு ஒரு முறை அளிக்கும் வழக்கமான அறிக்கைகள் தவிர பருவநிலை மாற்றம் தொடர்பான குறிப்பான அறிவியல் கேள்விகளைப் பற்றி சிறப்பு அறிக்கைகளையும் இந்த அமைப்பு வழங்கியது.

தொழிற் புரட்சிக்கு முந்திய காலத்தை ஒப்பிட புவியின் வெப்ப நிலை 1.5 டிகிரிக்கு மேல் உயரக்கூடாது என்ற மிக முக்கியமான அறிக்கையை 2018ல் வெளியிட்டது ஐபிசிசி. அரசியல் தலைவர்கள் பருவநிலை மாற்றத்துக்கு உரிய முறையில் முகம் கொடுக்கவேண்டும் என்று வலியுறுத்தி உலகம் முழுவதும் இளைஞர்கள் வீதிக்கு வருவதற்கு இந்த அறிக்கை மிகமுக்கியமான உந்துவிசையாக இருந்தது.

காரணம், இந்த அறிக்கை எல்லோரையும் ஆச்சரியப்படுத்தி, சிந்திக்கவைத்தது. இது எதிர்காலப் பிரச்னை அல்ல. இப்போதைய பிரச்னை என்ற எண்ணத்தை இந்த அறிக்கை தந்தது” என்கிறார் ஐபிசிசி துணைத் தலைவரும் அமெரிக்க தேசிய கடல் மற்றும் வளிமண்டல நிர்வாக அமைப்பின் ஆராய்ச்சிப் பிரிவின் தலைவருமான கோ பாரெட்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!