பள்ளிகள் மூடப்பட்டிருப்பதால் மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை கவனிக்காமல் விட்டால் அது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் எனவே பள்ளிகளை விரைவில் திறப்பதே நல்லது என்றும் நாடாளுமன்ற நிலைக்குழு அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.
நாடுமுழுவதும் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2020ஆம் ஆண்டு முதலே பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. ஆன்லைன் வகுப்புகள் நடந்தாலும் அது மாணவர்களுக்கு போதுமானதாக இல்லை. வீட்டிற்குள்ளேயே அடைந்து கிடப்பதால் மாணவர்களின் இயல்பில் பெரிய அளவில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
செல்போன், லேப்டாப்பும் கையுமாக மாணவர்கள் இருப்பதால் அவர்களின் விளையாட்டுத் திறன் தினசரி நடவடிக்கைகளில் பெரிதும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. பள்ளி வாழ்க்கையையே மாணவர்கள் இழந்து விட்டதால் அவர்களின் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் மாற்றங்கள் உருவாகி வருகிறது.
நாடு முழுவதும் கொரோனா அலை சற்றே ஓய்ந்திருந்தாலும் மூன்றாவது அலை தீவிரமாக இருக்கும் என்று உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளதால் பள்ளிகளை திறக்கலாமா வேண்டாமா என்று பல மாநில அரசு யோசித்து வருகின்றன. இந்த நிலையில் தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 23ஆம் தேதி வரைக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
குழந்தைகளுக்கு வேக்சின்கூட இல்லாத சூழலில் பள்ளிகள் திறப்பு.. அவசரம் காட்டும் அரசுகள்.. என்ன காரணம்?
செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 9ஆம் வகுப்பு, 10ஆம் வகுப்பு, 11ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்க உத்தேசிகப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. 50 சதவிகித மாணவர்களுடன் மேற்கண்ட பள்ளி மாணவர்களுக்கான வகுப்பை கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தொடங்க முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பெரும்பாலான மாணவர்களும் பெற்றோர்களும் பள்ளிகள் திறப்பதையே விரும்புகின்றனர்.
நாடாளுமன்ற நிலைக்குழு அறிக்கை
இதனிடையே மாணவர்கள் பள்ளிகளுக்கு சென்று ஓராண்டுக்கு மேலாகி விட்டது என்றும் இது அவர்களை மனதளவில் பெரிதும் பாதித்துள்ளது என்றும் நிலைக்குழு கூறியுள்ளது. பள்ளிகள் மூடலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை கருத்தில்கொண்டு அவற்றை திறப்பதைக் கூட ஆலோசிக்கலாம் என்றும் சஹஸ்ரபுத்தே தலைமையிலான எம்.பி.க்கள் குழு நாடாளுமன்றத்தில் தங்கள் அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.
மாணவர்கள் பள்ளிக்குச் செல்லாதது அந்தந்த குடும்பங்களை எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளதாகவும் நாடாளுமன்ற நிலைக்குழு தெரிவித்துள்ளது. மாணவர்கள், ஆசிரியர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது, பள்ளிகளை இரு ஷிஃப்டுகளில் பாடங்களை சொல்லித்தருவது, வேறுவேறு நாட்களில் வகுப்புகளை நடத்துவது உள்ளிட்ட வழிமுறைகளை பின்பற்ற பள்ளிகளை திறக்கலாம் என அந்தக் குழு அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.
கடந்த 2020-2021ஆம் கல்வியாண்டில் மாணவர்கள் பள்ளிகளுக்குச் சென்று பாடங்களைப் படிக்காமலேயே தேர்ச்சி பெற்று அடுத்த வகுப்புகளுக்கு சென்று விட்டனர். நடப்பு கல்வியாண்டிலாவது பள்ளிகள் திறக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.