உலகம்

78 ஆயிரம் ஆண்டு பழமையான குழந்தையின் கல்லறை கண்டுபிடிப்பு

83views

78 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் ஒரு குழந்தை நல்லடக்கம் செய்யப்பட்டது, ஆப்ரிக்காவின் மிகப் பழமையான இடுகாட்டுப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது.

மத்திய கற்காலத்தைச் சேர்ந்த 3 வயது குழந்தையின் கல்லறை கென்யா நாட்டில் ஒரு குகையில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

அக்குழந்தையின் கல்லறை மற்றும் எச்சங்களை ஆராய்ந்த ஆராய்ச்சியாளர்கள், அக்குழந்தையின் தலையை எப்படி ஒரு தலையணையில் கிடத்தி இருப்பது போல அடக்கம் செய்திருக்கிறார்கள் என, நேச்சர் என்கிற பத்திரிகையில் விவரித்து இருக்கிறார்கள்.

விஞ்ஞானிகள் அக்குழந்தையை ‘மடொடொ’ என பெயரிட்டு இருக்கிறார்கள். மடொடொ என்றால் ஸ்வாஹிலி மொழியில் ‘அந்த குழந்தை’ என்று பொருள்.

மீதமிருக்கும் எழும்புத் துண்டுகளை பத்திரமாக பாதுகாக்கும் நோக்கில், சர்வதேச அகழ்வாராய்ச்சியாளர்கள் அணி அக்கல்லறையை பாதுகாப்பாக பிளாஸ்டரில் வெளிக் கொண்டு வந்திருக்கிறார்கள். எனவே அவ்வுடலைக் குறித்து மேலதிகமாக தெரிந்து கொள்ளத் தேவையான ஆராய்ச்சிகளை செய்ய, அதை பாதுகாப்பாக பரிசோதனைக் கூடத்துக்கு அனுப்பி வைக்க முடிந்தது.

“ஒரு நிழலை அகழ்வாய்வது போல இருந்தது” என்கிறார் ஸ்பெயின் நாட்டின் மனித பரிணாம வளர்ச்சியின் தேசிய ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் பேராசிரியர் மரியா மார்டினான் டாரஸ்.

“நாங்கள் அதை வெளிக் கொண்டு வந்த போது, ஒரு குழந்தையைக் கையில் வைத்திருக்கிறோம் என்பதை நாங்கள் அறிந்திருக்கவில்லை” என அவர் பிபிசியின் இன்சைட் சயின்ஸ் ப்ரோகிராமிடம் கூறினார்.

ஆராய்ச்சியாளர்களால் அக்குழந்தையின் பற்களை ஆராய முடிந்தது. அப்படித் தான் அது ஒரு 2 – 3 வயதுக்கு இடைப்பட்ட மனித குழந்தை என உறுதி செய்ய முடிந்தது. பரிசோதனையில் அக்குழந்தையின் உடல் தாயின் வயிற்றுக்குள் இருக்கும் கருவைப் போல கிடத்தப்பட்டிருப்பது தெரிய வந்திருக்கிறது.

அக்குழந்தையின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட போது இறுக்கமாக மூடப்பட்டிருக்கலாம் என, எழும்புகள் நகர்ந்திருப்பது நமக்கு வெளிப்படுத்துகிறது. அதே போல அக்குழந்தையின் தலை ஒரு தலையணை போன்ற இலைதலைகளின் மீது கிடத்தப்பட்டிருக்கலாம், அது காலப்போக்கில் மட்கிப் போயிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

“கடைசியாக உறங்கும் போது போர்த்தப்படுவது போல, அக்குழந்தை இலைதலைகளால் ஆன சேலை அல்லது விலங்கின் தோல்களால் மூடப்பட்டிருக்கலாம்” என விளக்குகிறார் பேராசிரியர் மார்டினான் டாரஸ்.

“அக்குழந்தை மீது அக்குழுவினருக்கு இருந்த உணர்வையும், ஒரு பண்பு நயத்தையும் இது வெளிப்படுத்துகிறது”

குழந்தையின் எலும்பின் வடிவம் மற்றும் அளவு குறித்து மேலதிகமாக நடத்தப்பட்ட ஆய்வுகள் மற்றும் பரிசோதனைகளில், அக்குழந்தை ஒரு ஆணாக இருக்கலாம் என்கிற முடிவுக்கு வந்திருக்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

“அந்த குழந்தை மக்கள் வாழ்ந்த இடத்திலேயே புதைக்கப்பட்டிருக்கிறார்” என பேராசிரியர் மார்டினான் டாரஸ் கூறினார். “இந்த நடத்தைகள் அனைத்தும் அக்குழுவினரின் வருத்தத்தைக் குறிப்பதாகவோ, அக்குழந்தையை செல்லவிடாமல் தடுப்பது போலவோ இருக்கிறது”

ஆப்ரிக்கா தான் தற்கால மனித இனத்தின் தொட்டில் எனக் கருதப்படுகிறது. ஆனால் முன்பு பயன்படுத்தப்பட்ட கருவிகள், கூட்டாக இணைந்து வாழ்வது என எல்லா ஆதாரங்களுக்கு மத்தியில் மனித பரிணாம வளர்ச்சியில், இறந்தவர்களை நல்லடக்கம் செய்யும் முக்கியமான விஷயம் மட்டும் காணவில்லை என கூறினார்கள் விஞ்ஞானிகள்.

“ஆப்ரிக்காவில் காணப்படும் அடுத்த பழமையான கல்லறை என்றால் அது சுமார் 74,000 ஆண்டு பழமையானது” என்கிறார் லண்டன் நகரத்தில் இருக்கும் நேச்சுரல் ஹிஸ்டரி மியூசியத்தைச் சேர்ந்த முனைவர் லூயிஸ் ஹம்ஃப்ரே. “ஆச்சர்யப்படுத்தும் வகையில் அதுவும் ஒரு இளம் வயதுக் குழந்தையின் கல்லறை, அது 50 ஆண்டுகளுக்கு முன் மோசமான முறையில் அகழ்வாய்ந்து எடுக்கப்பட்டது. எனவே அதைக் குறித்து நமக்கு அதிகம் தெரியாது”

“இங்கு நிச்சயமாக ஒரு தனிநபருக்கு ஏற்பட்ட இழப்பை வெளிப்படுத்தும் வகையிலான உணர்வு காணப்படுகிறது” என கூறினார். “அம்மக்கள் தங்களைச் சுற்றியுள்ள உலகத்தை பிரதிபலிக்கும் வகையில் பல குறியீடுகளைக் கொண்டிருந்தார்கள் என்பதற்கான ஆதாரங்கள் இவை” என்கிறார் முனைவர் லூயிஸ்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!