இந்தியா

500 கோடி கொரோனா தடுப்பூசிகளை இந்தியா 2022 இறுதிக்குள் உற்பத்தி செய்யும்: ஜி20 மாநாட்டில் மோடி

59views

2022-ம் ஆண்டின் இறுதிக்குள் இந்தியா 500 கோடி கொரோனா தடுப்பூசிகளை உற்பத்தி செய்யும் என்று ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி உறுதியளித்தார்.

இத்தாலி தலைநகர் ரோம் நகரில் ஜி20 கூட்டமைப்பின் உச்சி மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா உள்ளிட்ட 20 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர். ஜி20 கூட்டமைப்பு இத்தாலி தலைமை வகிப்பதால் ரோமில் இம்மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்று தமது கருத்துகளை முன்வைத்தார்.

இது தொடர்பாக தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, ஜி20 உச்சி மாநாட்டில் இன்றைய விவாதங்கள் ஆக்கப்பூர்வமாகவும் விரிவாகவும் இடம்பெற்றிருந்தன. பல்வேறு அமர்வுகளின் விவாதங்களில் நான் பங்கேற்றேன். சர்வதேச நலன்களுக்காக முக்கியமான நாடுகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். என்னுடைய உரையின் போது கொரோனா வைரஸ் பரவலுக்கு எதிரான உலகளாவியப் போராட்டத்தில் இந்தியாவின் பங்களிப்பை விவரித்தேன். குறிப்பாக இந்தியாவின் ஒரே பூமி, ஒரே சுகாதாரம் என்ற கோட்பாடு கொரோனாவுக்கு எதிரான போரில் உலக நாடுகளுக்கு உதவிக்கரம் நீட்டியதையும் விவரித்தேன். இவ்வாறு பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார். மேலும் இந்தியா 100 கோடிக்கும் அதிகமானாருக்கு கொரோனா தடுப்பூசிகளை செலுத்தியிருக்கிறது. அத்துடன் 2022-ம் ஆண்டின் இறுதிக்குள் 500 கோடி கொரோனா தடுப்பூசிகளை உருவாக்கவும் இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளது என்றார் பிரதமர் மோடி.

இம்மாநாட்டின் போது ஐ.நா. பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்ரெஸ், உலக சுகாதார அமைப்பின் தலைவர் (WHO) டெட்ரோஸ் அதானாம் கேப்ரிஷியஸ், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மார்கல், துருக்கி அதிபர் எர்டோகன் உள்ளிட்டோரை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். முன்னதாக வாடிகன் சென்ற் பிரதமர் மோடி போப்பாண்டவர் போப் பிரான்சிஸை சந்தித்து உரையாடினார். போப்பாண்டவருடனான பிரதமர் மோடியின் முதல் சந்திப்பு இது. இச்சந்திப்பின் போது போப்பாண்டவரை இந்தியாவுக்கு வருகை தருமாறு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். இந்த அழைப்பை போப்பாண்டவர் ஏற்றுக் கொன்டதாக வாடிகன் செய்திகள் தெரிவிக்கின்றன. இதனைத் தொடர்ந்து ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் நடைபெறும் பருவநிலை மாற்றம் தொடர்பான COP26 மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார்.

இதனிடையே ஜி20 தலைவர்கள் உச்சிமாநாட்டுக்கு இடையே இத்தாலி பிரதமர் மரியோ டிராகி, பிரதமர் மோடி இடையே இருதரப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தியா-இத்தாலி இடையே மேம்படுத்தப்பட்ட கூட்டுறவுக்கான செயல் திட்ட தீர்மானம் கடந்த 2020 நவம்பர் 6ம் தேதி ஏற்றுக்கொள்ளப்பட்டதில் இருந்து இருதரப்பு உறவில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதை இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டனர். பருவநிலை மாற்றத்தை எதிர்த்து போராடுவதற்கான தூய எரிசக்தி மாற்றத்தை துரிதப்படுத்துவதில் உள்ள பிரச்னைகள் உட்பட செயல்திட்டத்தில் கூறியபடி முக்கிய துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான தீர்மானத்தை இரு தலைவர்களும் வெளிப்படுத்தினர். கடந்த மே 8ம் தேதி, போர்டோவில் நடந்த இந்தியா-ஐரோப்பிய யூனியன் தலைவர்கள் கூட்டத்தை இரு தலைவர்களும் நினைவு கூர்ந்தனர்.

மேலும் பருவநிலை மாற்றம், பல்லுயிர் இழப்பு மற்றும் மாசு ஆகியவற்றில் உள்ள சவால்களை தீர்ப்பதன் அவசியத்தை ஐரோப்பிய யூனியனும், இந்தியாவும் வலியுறுத்தியது மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கான ஒத்துழைப்பு, பசுமை ஹைட்ரஜன் பயன்பாடு, எரிசக்தி திறனை ஊக்குவித்தல், ஸ்மார்ட் மின் தொகுப்புகளை உருவாக்குதல், சேமிப்பு தொழில்நுட்பங்கள், மின்சந்தையை நவீனப்படுத்துவது ஆகியவற்றில் ஒத்துழைப்பை மேம்படுத்தவும் ஒப்புக் கொண்டன. இதனடிப்படையில் 2030ம் ஆண்டுக்குள் 450 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்கள் அமைக்கும் இந்தியாவின் முடிவை இத்தாலி பிரதமர் பாராட்டினார். சர்வதேச சூரியசக்தி கூட்டணிக்கு இத்தாலியின் தீவிர ஆதரவுக்கும் பாராட்டும் தெரிவிக்கப்பட்டது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!