41 ஆண்டுகளாக சேவையாற்றிய ஐஎன்எஸ் ராஜ்புத் போர்க்கப்பல் கடற்படையில் இருந்து விடுவிப்பு
41 ஆண்டுகளாக இந்திய கடற்படையில் சேவையாற்றி வந்த ஐஎன்ஸ் ராஜ்புத் போர்க்கப்பல் கடற்படை சேவையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.
ஐஎன்எஸ் ராஜ்புத் போர்க்கப்பலானது, நாட்டின் முதல் அழிக்கும் திறன் கொண்ட கப்பல் என்ற பெருமையைக் கொண்டதாகும்.முந்தைய சோவியத் ரஷ்யாவால் ராஜ்புத் போர்க்கப்பல் கட்டப்பட்டு இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டது. நெடுந்தூரம் சென்று தாக்கி அழிக்கும் பிரம்மோஸ் ஏவுகணை, நீருக்குள்ளேயே சென்று தாக்கி அழிக்கும் ஏவுகணைகள், விமானத்தை தாங்கி திற்கும் திறன், குண்டு மழையே பொழிந்தாலும் தாங்கிக் கொள்ளும் வசதி என பல்வேறு அதி திறன்களை இந்தக் கப்பல் கொண்டுள்ளது. முதன் முறையாக பிரம்மோஸ் ஏவுகணை இந்த போர்க்கப்பலில் இணைக்கப்பட்டு சோதனை செய்து பார்க்கப்பட்டது.
இந்நிலையில் இந்த கப்பலை, கடற்படையிலிருந்து விடுவிப்பதாக நேற்று முன்தினம் இந்திய கடற்படை அறிவித்தது. இதற்கான விழா ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் அமைந்துள்ள கடற்படை தளத்தில் எளிமையாக நடைபெற்றது.
ரஷ்யாவின் கஷின் ரகத்தைச் சேர்ந்த இந்த போர்க்கப்பல் கடந்த1980-ம் ஆண்டு மே 4-ம் தேதி இந்திய கடற்படையில் சேர்க்கப்பட்டது. இதனை அப்போதைய ரஷ்யாவுக்கான இந்திய தூதராக செயல்பட்ட ஐ.கே.குஜ்ரால் கடற்படையில் இணைத்தார். தற்போது வரை இக்கப்பலில் 31 பேர், தலைமை அதிகாரிகளாக பணியாற்றி இருக்கின்றனர். மேலும், இதுவரை 7,87,194 நாட்டிக்கல் மைல் (கடல் மைல்) தூரம் வரை பயணம் செய்துள்ளது.
இந்திய அமைதிப் பணிப் படை (ஐபிகேஎஃப்), ஆபரேஷன் காக்டஸ் (மாலத்தீவில் இருந்த பிணையக் கைதிகளை மீட்பதற்காக நடைபெற்ற ஆபரேஷன்), ஆபரேஷன் கிரவுஸ்நெஸ்ட் போன்ற மிக முக்கியமான மிஷன்களில் ஐஎன்எஸ் ராஜ்புத் திறம்பட செயலாற்றியுள்ளது. மேலும் பல்வேறு பேரிடர் மீட்புப் பணிகளிலும் இது சிறப்பாக பணியாற்றியுள்ளது.
போர்க்கப்பல், கடற்படையி லிருந்து விடுவிக்கும் நிகழ்வைக் குறிக்கும் வகையில் கடற்படை வைஸ் அட்மிரல் அஜேந்திர பகதூர் சிங் சிறப்பு அஞ்சல் அட்டையை நிகழ்ச்சியின்போது வெளியிட்டார்.