உலகம்உலகம்செய்திகள்

2400 ஆண்டுகளுக்கு முந்தைய டோலண்ட் மனிதன் வயிற்றில் கெடாமல் இருக்கும் கடைசி உணவு: இது ஒரு மம்மி ஸ்டோரி..!

93views

மம்மி பற்றிய கதை என்றாலே சுவாரஸ்யம்தான். அதனால்தான் ஹாலிவுட் திரையுலகம் மம்மி, மம்மி ரிட்டர்ன்ஸ் என்றெல்லாம் படம் எடுத்து கல்லா கட்டியது.

இந்நிலையில், 2400 ஆண்டுகளுக்கு முன் நல்லடக்கம் செய்யப்பட்டு இயற்கையாலேயே பாதுகாக்கப்பட்ட மம்மியின் வயிற்றில் கடைசியாக அந்த மனிதர் உட்கொண்ட உணவுப் பொருட்கள் செரிமானம் ஆகாமல் அப்படியே உள்ளது. பார்லி, ஆளி விதை, பெர்சிகேரியா விதைகள், மீன் செரிமானம் ஆகாமல் இன்னும் அந்த மம்மியின் வயிற்றில் அப்படியே உள்ளது ஆச்சர்யமான செய்தியாக வெளியாகியுள்ளது.

டோலண்ட் மனிதன்..

மண்ணில் பிறந்த அனைவருமே மண்ணுக்கு இரையாவது தான் உலக நியதியாக உள்ளது. மாண்டோர் மீளப்போவதில்லை. ஆனால், உலகில் சில மாண்டோரின் உடல் மட்டும் அழுகிப்போகாமல் அப்படியே இருந்து ஆச்சர்யப்படுத்திவிடுகிறது. எகிப்தில் பாதுகாக்கப்படும் மம்மிகள் ஒரு ரகம் என்றால். இயற்கையாலேயே பாதுகாக்கப்பட்ட மம்மிக்கள் வேறு ரகம். அப்படி ஒரு மம்மி தான் டோலண்ட் மனிதன். விஞ்ஞானிகளின் கூற்றின்படி, இந்த டோலுண்ட் மேன் (Tollund Man ) டென்மார்க்கின் ஜுட்லான்ட் தீபகற்பத்தில் வசித்திருக்க வேண்டும் என்று தெரிகிறது. இவர் கிறிஸ்துவுக்கு 300 ஆண்டுகளுக்கு முந்தைய மனிதர் என்றும் இவர் தூக்கிட்டு தற்கொலை செய்திருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. இவர் இறப்பதற்கு 12 அல்லது 24 மணி நேரத்துக்கு முன்னதாக சாப்பிட்ட உணவுப் பொருள் செரிமானம் ஆகாமல் அப்படியே வயிற்றில் உள்ளது. பார்லி, ஆளி விதை, பெர்சிகேரியா விதைகள், மீன் ஆகியனவற்றை அவர் உட்கொண்டதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

மேலும், அந்த நபரின் குடலில் உள்ள ஒட்டுண்ணிகளைப் பார்க்கும்போது அவர் இறக்கும்போது நல்ல உடல்நிலையில் இல்லை என்பதும் தெரியவந்துள்ளது.

இது தொடர்பான ஆய்வுக் கட்டுரை ஆன்ட்டிக்விட்டி என்ற இதழில் வெளியாகியுள்ளது. டென்மார்க்கின் சில்க்போர்க் அருங்காட்சியகத்தின் தொல்லியல் அறிஞரான நீனா நீல்சன் தலைமையிலான குழுவின் ஆராய்ச்சி முடிவுகள் ஆன்ட்டிக்விட்டி என்ற இதழில் வெளியாகியுள்ளது. அதில் சதுப்பு நிலங்களில் சிக்கி மம்மியாகும் மனித உடல் நீண்ட காலத்துக்கு பாதுகாப்பாக இருக்கும். சதுப்புநில சகதியானது மனித உடலின் நகம், முடி மற்றும் தோல் மற்றும் உள்ளுறுப்புகளை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு அப்படியே பாதுகாக்கக் கூடியது.

அப்படி இயற்கையாகவே பாதுகாக்கப்பட்ட மனித உடல் கடந்த 1950 ஆம் ஆண்டு தற்செயலாகக் கண்டெடுக்கப்பட்டது. அதே ஆண்டு அந்த உடல் தடயவியல் ஆய்வுக்காக அனுப்பிவைக்கப்பட்டது. அப்போது அந்த உடல் இரும்புக் காலம் எனப்படும் ஐயர்ன் ஏஜ் சார்ந்தது என்பது தெரியவந்தது.

டோலன்ட் மனிதனின் வயிற்றில் உள்ள உணவுப் பொருட்கள் குறித்து மீள் ஆய்வு நடத்த விரும்பி அதை இப்போது செய்துள்ளதாக நீல்சன் தெரிவித்தார்.

இதன் மூலம் ஆதி மனிதனின் வாழ்க்கை முறையை நாம் நெருக்கமாக உணர்ந்து கொள்ள முடிகிறது என்று நீல்சன் கூறினார்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!