தொழில்நுட்பம்

2022ன் குலைப்பு வகை அல்லது டிஸ்ரப்டிவ் தொழில்நுட்பங்கள்- செல்திசை

346views
குலைப்பு வகை அல்லது டிஸ்ரப்டிவ் தொழில்நுட்பங்கள் பற்றி ஒரு சிறிய குறிப்பு:
இந்த வகை தொழில்நுட்பங்கள் ஒரு பெரும் மாற்றத்தை சமூகத்தில் ஏற்படுத்தக்கூடியவை. உதாரணமாக கைபேசி அல்லது செல்போன். இதையே எண்முறை தளமாக (Digital platform) ஆக எடுத்துக்கொண்டு கடந்த பத்து வருடங்களில் பெரும் சாதனைகள் நிகழ்ந்துள்ளன. கற்றல், பொழுதுபோக்கு, உடல்நலம், வங்கி சேவைகள், ஆன்லைன் வியாபாரம், அரசாங்க சேவைகள், பிரயாணம் என அனைத்தும் நமது கைபேசியில் இருந்தே செயல் படுத்தப்படுகிறது.
இந்த வருடம்  பத்து குலைப்பு வகை தொழில்நுட்பங்கள் செல்திசையாக (trends) குறிக்கப்பட்டுள்ளன. அவை என்ன, அதன் தாக்கம் என்ன, அதில் எத்தனை புத்தொழில்கள் அந்த சந்தையில் இயங்குகின்றன என்ன என்கிற குறிப்புகளை பார்க்கலாம்
  1. முப்பரிமாண அச்சு – 3D PRINTING
  2. செயற்கை நுண்ணறிவு மற்றும் எந்திர அறிதல் – AIML
  3. ரோபோட்டிக்ஸ் அல்லது எந்திரங்கள் – ROBOTICS
  4. இணைய பாதுகாப்பு முன்னேற்றங்கள் – CYBER SECURITY ADVANCES
  5. விளிம்பில் கணித்தல் – EDGE COMPUTING
  6. நிகர் மற்றும் மேலதிக மெய் – VIRTUAL AND AUGMENTED REALITY
  7. வீட்டிலிருந்தே வேலை எனும் புரட்சி – WORK FROM HOME REVOLUTION
  8. பயனரின் குரல் – VOICE ENABLEMENT
  9. தொகுதி சங்கிலி – BLOCKCHAIN
  10. குவைய கணித்தல் – QUANTUM COMPUTING
முப்பரிமாண அச்சு:
இது ஸ்டார் ட்ரெக் என்கிற விஞ்ஞான டிவி தொலைத் தொடரில் வரும் ரெப்ளிகேட்டர் போல ஒரு கருவி. பொறியியல் வரைபடமும் கச்சாப்பொருளும் பிரின்டரும் இருந்தால் மிகக் குறைந்த நேரத்தில் நமக்கு வேண்டிய பொருள் தயாராகிவிடும். இதையே தொழிற்சாலையில் உற்பத்தி முறையை நாம் பின்பற்றினோம் என்றால் இந்தப் பொருள் கிடைப்பதற்கு குறைந்தபட்சம் ஒரு வாரம் ஆகலாம்.
தொழிற்சாலையில் உற்பத்தி முறைகளில் இது ஒரு நவீன அணுகுமுறையாக கருதப்படுகிறது இதை கூட்டச்சு (Additive Printing) என அழைக்கின்றனர். பாரம்பரியமாக உற்பத்தியில் கச்சா பொருளை எடுத்துக்கொண்டு அதில் மாறுதல்களை ஏற்படுத்தி, நமக்கு வேண்டிய வடிவத்தை செதுக்கி கொள்வோம். இந்த முறையில் கச்சாப் பொருட்கள் வீணாவது  தவிர்க்க முடியாத ஒன்றாகும்.
ஆனால் கூட்டச்சில் அடுக்கடுக்காக வேண்டிய வடிவத்தை நாம் அடுக்குவதால், ஒரு புள்ளியில் இருந்து தொடங்கி வேண்டிய அளவு விளிம்பிற்கு சென்று துல்லியமாக நின்று விடுவதால் இதில் வீணாகும் கச்சாப் பொருட்கள் கிடையவே கிடையாது.
பல சிக்கலான எந்திர பகுதிகளை வேகமாக மாற்றியமைத்து  சீக்கிரமாக முப்பரிமாண அச்செடுப்பது  மிக எளிய வேலையாகும்.  இந்த எந்திர பகுதிகள் உறுதியாகவும் அதேசமயம் எடை குறைவாகவும் இருக்க வேண்டிய தருணங்களில் கச்சாப் பொருள்கள் ஓரிரெண்டு வகைகளில் சுருங்கி விடும். அந்த சமயம் முப்பரிணாம அச்சின் மூலம் இதைத் தயாரிப்பது மிகப் புதிய அணுகு முறையாகும்.
ஜி.ஈ. (G.E) அதன் விமானங்களுக்கு ஜெட் என்ஜினை, அதன் உதிரி பாகங்களை முப்பரிமாண அச்சில் தயாரிக்கிறது.
இது தவிர முப்பரிமாண அச்சு மருத்துவத்தில் உடலில் வைக்கப்படும் உள்வைப்பு அல்லது இம்பிளான்ட், உடலின் அவயங்கள் அளவுக்கே துல்லியமாக தயாரிக்கப்பட இது உதவுகிறது. கட்டிடங்களிலும் இந்த தொழில்நுட்பம் வெகுவாக உதவுகிறது.
விசேஷமான பட்டப்படிப்புகளிலும் இளைஞர்களுக்கு மத்தியிலும் இந்த தொழில்நுட்பம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அதன் காரணமாக பல புத்தொழில் நிறுவனங்கள் முப்பரிமாண அச்சை அடித்தளமாகக் கொண்டு பல புதுமைகளை செய்து வருகிறது.
இந்த சந்தை 50 பில்லியன் டாலர்களுக்கும் மேற்பட்டது என ஆவணங்கள் தெரிவிக்கின்றன
இந்தத் துறையில் பல்வேறு புத்தொழில்கள் உள்ளன. அவைகளை வகைப்படுத்தி கீழே உள்ள படத்தில் கொடுக்கப்பட்டிருக்கிறது.

செயற்கை நுண்ணறிவு மற்றும் எந்திர அறிதல்:
இது மிக முக்கியமான குலைப்பு வகை தொழில்நுட்பம். தற்போது பல்வேறு துறைகளில், நிறுவனங்களில் முதலீட்டாளர்கள் கேட்கும் ஒரே கேள்வி இதுதான். நீங்கள் செயற்கை நுண்ணறிவு மற்றும் எந்திர அறிதலை உங்கள் செயல்முறை வகைகளில் உபயோகப் படுத்துகிறீர்களா? உபயோக படுத்தவில்லை என்றால் ஏன்?
இது ஏன் என்று சற்று புரிந்து கொள்வோம்.
வடிவமைத்தல், வளர்ச்சி ஆக்கம், இயக்கம், சந்தைப்படுத்துதல், சேவை என தயாரிப்புகளின் எல்லா நிலைகளிலும் செயற்கை நுண்ணறிவு பல மேம்பாடுகளை அளிக்கிறது.
தரவுகள் சேர்க்கும் ஒவ்வொரு தருணத்திலும் உணரிகள் அல்லது சென்சார் மூலம் சேகரிக்கப்படும் தகவல் துளிகளிலும், பகுப்பாய்வுகளின் மூலமும், முடிவுகளின் மூலமும் செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தப்பட்டு ஆகச்சிறந்த உபயோகங்களை காட்டியுள்ளது.
இது எல்லாத் துறைகளுக்கும் பயன்படக்கூடியது. கல்வி, அரசாங்கம், நிறுவனங்கள், மருத்துவம், தொழிற்சாலைகள், வங்கிகள்,  மற்றும் பொருளாதாரம் என எல்லாத் துறைகளுக்கும் இது உதவக்கூடியது இதை அறிந்து கல்வி நிறுவனங்களும் பயிற்சி நிறுவனங்களும் தரவு அறிவியலாளர்களை (Data Scientist) உருவாக்க பல திட்டங்களை வகுத்துள்ளன.
இதற்கென தனியாக ஒரு வரைபடம் உண்டு. தொழில்நுட்ப அடுக்குகள், நிறுவனங்களில் பொது நுண்ணறிவு, நிறுவனங்களில் இயக்கத்தில் நுண்ணறிவு, தானியங்கி அமைப்புகளில் நுண்ணறிவு, சாட்பாட் எனும் உரையாடல் செயலிகளில் நுண்ணறிவு, பெரும் துறைகளில் நுண்ணறிவு, மருத்துவத்தில் நுண்ணறிவு என விரிவான வரைபடம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த சந்தை பல ட்ரில்லியன் டாலர்களுக்கும் மேல் என ஆவணங்கள் தெரிவிக்கின்றன
உலகளாவிய நிறுவனங்களில் இந்த நுண்ணறிவை எப்படி வடிவமைப்பது, எப்படி இயக்குவது என்கிற முறைகளை ஆலோசிப்பதற்காக பல்வேறு புத்தொழில் நிறுவனங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இவை ஏஐ 100 என அழைக்கப்படுகின்றன. அந்த பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
ரோபோட்டிக்ஸ் அல்லது எந்திரங்கள்:
நாம் ரோபோட்டிக்ஸ் மற்றும் எந்திரங்களின் முன்னேற்றத்தை அன்றாடம் நம்மைச் சுற்றி இயங்கும் ட்ரோன்களின் மூலம் கண்டிருக்கிறோம். சிறுவர்களும் பல இளைஞர்களும் கூட இதைச் சார்ந்து பல பொழுதுபோக்கு மையங்கள் உருவாக்கியிருக்கின்றனர். தவிர பெற்றோர்களின் கனவுகளை நனவாக்குவோம் என கூறி பல பயிற்சி மையங்களும் கல்விக் கூடங்களும் இதை சார்ந்தே அமைக்கப் பட்டிருக்கின்றன. இதன் மீதான மிகப்பெரிய விரிவான கனவுகள் நமது அடுத்த தலைமுறைக்கு உண்டு.
நமது தொழிற்சாலைகளில், வீடுகளில், மருத்துவ மனைகளில், அலுவகங்களில் எவ்வாறு ரோபோட்டிக்ஸ் மற்றும் ட்ரோன்கள் மனிதர்களுடன் இணைந்து உதவி செய்து பணிகள் செய்யப் போகின்றன என்பதைப் பற்றி பல ஆவணங்கள் உள்ளன. சில ஆவணங்கள் 12 கோடிக்கும் மேற்பட்ட பணிகள் ரோபோட்டிக்ஸ் மற்றும் ட்ரோன்களால் செய்யக்கூடும் என்று பதிவு செய்துள்ளது.
ஏற்கனவே இருக்கும் பணியாளர்களின் வேலையை இந்த ரோபோட்களும் ட்ரோன்களும் பறித்துக்கொண்டு விடக்கூடும் என்ற ஒரு அச்சம் நிலவி வருகிறது. ஆனால் இங்கு ஏற்கனவே இருக்கும் பணியாளர்களுக்கு எந்திரங்களை மேலாண்மை செய்யும் பயிற்சி கொடுத்து அவர்களையும் எந்திரங்களையும் சேர்ந்தே உபயோகிக்கும் அளவுக்கு நமக்கு வேலைப்பளு இருக்கின்றது என பல நிபுணர்கள் கருதுகின்றனர். ஆகையால் நம் முன்னே இருக்கும் முக்கியமான கேள்வி மனிதர்களும் எந்திரங்களும் சேர்ந்து சிறப்பாக பணிபுரியுமா என்பதே ஆகும்.
இது தவிர ரோபோட்கள் சூழலுக்கேற்ப, புதிய தேவைகளுக்கு ஏற்ப அதன் செய்கைகளை மாற்ற, புதிய நிரல்கள் உருவாக்கப்பட வேண்டும். இதற்கு நிரலர்கள் தேவைப்படுகின்றனர். அவர்களும் இந்த பணியில் மிக முக்கிய அங்கம் வகிக்கின்றனர் .
பல தொழிற்சாலைகளில் முக்கியமாக மோட்டார் தொழிற்சாலைகளில் இந்த ரோபோட்கள் உற்பத்தி திறனுக்காகவும்,  தரமான பொருட்களை குறைந்த செலவில் தயாரிக்கவும் பேரளவில் உபயோகிக்கப் படுகின்றன. தொழிற்சாலைகளில் மட்டுமல்லாமல் விவசாயத்திலும் ட்ரோன்களின் பலன்கள் புரிந்து கொள்ளப்பட்டதால் பெருமளவு இந்த தொழில்நுட்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
கோவிட் பெருந்தொற்று சூழலில் தொடர்பில்லாத வினியோகம் (contactless distrubution)  மூலம் சமுதாயத்திற்கு இந்த தொழில்நுட்பம் பேருதவி செய்துள்ளது. (தொற்று பரவாமல் தடுப்பதில்) தூரத்திலிருந்தே இயக்கப்படும் சாத்தியங்களை கொண்டு இந்த ரோபோட்கள் தொழிற்சாலைகளின் உற்பத்தி திறனை ஆட்கள் அருகில் இல்லாமலேயே தொடர்ந்து பராமரித்து உள்ளது.  இந்த சந்தை ட்ரில்லியன் டாலர்களுக்கும் மேல் என ஆவணங்கள் தெரிவிக்கின்றன
இந்த துறையில் உள்ள புத்தொழில் நிறுவனங்கள் வகைப்படுத்தப்பட்டு கீழே உள்ள படத்தில் விவரிக்கப் பட்டுள்ளது.
இணைய பாதுகாப்பு முன்னேற்றங்கள்:
புதிய தொழில் நுட்பங்கள் வளர வளர நமது கணினி எந்திரங்களில், கணினி வலையத்தில், கைபேசிகளில் என எல்லாக் கருவிகளிலும் தாக்குதல்களும் அதிகமாகியுள்ளது.
ஒருவருடைய அடையாளத்தை திருடுவது, தரவுகளை திருடுவது, தரவுகளை மாற்றியமைப்பது, தரவுகளை குறியீட்டால் மறைப்பது, வைரஸ் நிழல்களை நுழைப்பது, நிழல் செயலிகளை இயக்குவது என பலவகை தாக்குதல்கள் உள்ளன. அன்றாடம் நீங்கள் இயக்கும் கணினி கருவிகள் பாதுகாப்பாக இருக்கிறதா, நீங்கள் பாதுகாப்பான சூழலில் இயங்குகிறீர்களா என அளவிட பலவிதமான செயலிகள் உண்டு.
மற்ற சூழ்நிலைகளில் உள்ள பாதிப்புகளையும் கவனித்து அதற்கு எதிரான நிரல்களை உருவாக்கி இந்த செயலிகள் அன்றாடம் மேம்படுத்த படுகின்றன.
தற்போதைய சூழல் புதிய நவீன முறைகளால் தாக்கப்படுகின்றன இவற்றில் ஒன்று ரான்சம்வேர் (Ransomware) எனப்படும் தாக்குதல். கணினியில் உள்ள ஏதோ ஒரு பாதிப்பை சாதகமாக மாற்றிக்கொண்டு உள்ளே நுழைந்து கணினியில் உள்ள முக்கிய தரவுகளை குறியீட்டால் அல்லது என்கிரிப்ஷன் கொண்டு மாற்றிவிடுவது. பிறகு பயனருடன் தொடர்புகொண்டு துளிக் காசுகளாக அல்லது பிட்காயின்களாக ஒரு மீட்பு தொகையை அதிகாரமாக கேட்பது.
இந்த முறையில் பணம் கோருபவரின் அடையாளம் தெரிவதில்லை. பிட்காயின் முறையினால் நடக்கும் பரிமாற்றம் அடையாளங்களை மறைத்து விடுகிறது.
இது போன்ற பல அன்றாட சிக்கல்களை சரி செய்வதே இந்த நிறுவனங்களின் பணியாகும்.
இந்த சந்தை 100 பில்லியன் டாலர்களுக்கும் மேல் என ஆவணங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் பாதுகாப்புத் துறையில் ஒரு சிக்கல் இருக்கிறது. இது விபத்துக்களைத் தவிர்ப்பதால் இதில் முதலீடு செய்யவும் பணம் செலவழிக்கவும் நிறுவனங்களின் மேலாண்மை முன்வருவதில்லை. ஏதோ ஒரு விபத்து நடந்த பின் தான் இந்த முதலீடுகளைப் பற்றி சற்று யோசிக்கிறார்கள். ஆகையால் வருமுன் காப்போம் என்று பலர் இயங்குவதில்லை. அதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது
இதிலுள்ள புத்தொழில்களும் அதன் வகைகளும் படத்தில் குறிப்பிடப்பட்டிருக்கின்றன
விளிம்பில் கணித்தல்:
இந்த தொழில்நுட்பம் புதிய வருகையில் புதிய கட்டமைப்பில் வேகமாக இயங்கிக் கொண்டிருக்கும் ஒன்றாகும் இதனைப் புரிந்து கொள்ள நாம் சற்று பின்னே செல்ல வேண்டும்.
கணினியின் ஆரம்ப காலகட்டத்தில் ஆட்டோ கோடர் அல்லது அட்டையில் துளையிட்டு நிரல் செய்யும் முறை இருந்தது. இவை பெருங் கணினி அல்லது மெயின் பிரேம் என்று அழைக்கப்பட்டன. இதிலிருந்து சற்று முன்னேறிய வடிவம் பச்சை ஒளிர் திரைகளால் ஆன டெர்மினல் எனப்படும் கருவிகள். அதிலிருந்து க்லயண்ட் சர்வர் எனப்படும் ஒரு மாடலுக்கு கணினி சேவைகள் நகர்ந்து சென்றது. தற்போது மேகக் கணினி என்ற முறையில் கணினி சேவைகள் இயங்கிவருகின்றது. இந்தத் தருணத்தில் புதிதாக முளைத்தெழுந்த கட்டமைப்புதான் விளிம்பில் கணித்தல்.
இந்த தொழில்நுட்பம் இந்த வகையிலேயே மிக அதிகமாக குலைத்தலை செய்யக்கூடியது. இதனுள் ஏற்கனவே செயற்கை நுண்ணறிவு, தானியங்கி சேவைகள், மேகக் கணினியுடன் இணைப்பு என்கிற பலவிதமான நவீன தொழில் நுட்பங்கள் உண்டு.
மேகக்கணியின் கட்டமைப்பு செயற்கை நுண்ணறிவோடு இணைந்து செயல்படும் போது உணர்ந்தது என்னவென்றால் எல்லா தேவைகளுக்கும் நடுவில் மேகக் கணினியை சென்றடைந்து அதன் பகுப்பாய்வுக்காக காத்திருந்து அதன் ஆணைகளை பெறுவது பல சமயம் மிகுந்த நேரம் ஆகிவிடுகிறது. எனவே விளிம்பில் இருக்கும் கணிணிகள் –  அவை பல வகைகளாக இருக்கலாம். ஒரு மடிக்கணினி ஆக இருக்கலாம். ஒரு கைபேசியாக இருக்கலாம். அல்லது கையில் உள்ள எண் முறை (Digital watch) கடிகாரமாக இருக்கலாம். அல்லது ட்ரோனாக கூட இருக்கலாம் – தானே இயங்கி முடிவெடுக்க வேண்டிய தருணங்கள் மேலெழுகின்றன.
இந்தத் தருணத்தில் விளிம்பில் உள்ள கணினி செய்யவேண்டிய பகுப்பாய்வு எது, அதனுடன் தொடர்பு கொள்ளும் மேகக் கணினி செய்யவேண்டிய பகுப்பாய்வு எது, எனப் பளுவை பிரித்துக் கொண்டு இயங்க வேண்டிய பொறுப்பு விளிம்பில் கணித்தலின் செயல்பாட்டை விளக்குகிறது.
தற்போதைய பல கருவிகள் – கைப்பேசி, வீட்டிலிருக்கும் அலெக்சா, டிவியில் இருக்கும் அமேசான் டிரைவ், தொழிற்சாலைகளில் உள்ள ரோபோட்கள், மருத்துவ மனையில் இருக்கும் கவனிப்பான்கள் – அனைத்திலும் கணினிகள் பொருத்த பட்டுள்ளது. அவை அனைத்திலும் ஓரளவு செயற்கை நுண்ணறிவு நிரல்கள் மற்றும் செயலிகள் உள்ளன. அவை தனது சேவைகளை பயனரின் தேவையை (பயனர் தரவுகள் மூலம்) அறிந்து செயல்பட்டு அவர்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கின்றன. பல நாட்கள் இவ்வாறு சேர்ந்த தரவுகளில் உள்ள பகுப்பாய்வுகளை மேக கணினிக்கும் உடனுக்குடன் பதிவு செய்ய வேண்டியவைகளை பகுப்பாய்வுகளை விளிம்பில் கணித்தல் மூலம் செயல்படுத்துவதும் இந்த நவீன கருவிகளின் தற்போதைய பரிமாண வளர்ச்சி ஆகும்
இதன் வளர்ச்சியும் ஊடுருவலும் மிகவும் கவனிக்கத்தக்க ஒன்றாகும். அன்றாடம் வளர்ந்திருக்கும் இந்தத் துறை பல்வேறு புத்தொழில்களால் நினைக்கப் ப்பட்டிருக்கின்றன. பல முதலீட்டாளர்கள் இந்த தொழில்நுட்பம் வெற்றி பெறும் என நம்புகின்றனர்
இந்த தொழில்நுட்பம், வியாபாரத்தை எவ்வாறு உயர்த்துகிறது என்று ஒரு படம் விவரிக்கிறது. விளிம்பு கணித்தலுக்கு என்ன தேவை, தருவது என்ன, வியாபாரத்தில் தாக்கம் என்ன என்பதை அடுக்குகளாக விவரித்து உள்ளனர்.

இதை தவிர நாஸ்காம் நிறுவனம், இந்தியாவிற்கு உள்ள சந்தர்ப்பத்தை விரிவாக ஒரு படத்தில் ஆவணப் படுத்தியுள்ளது. நான்கு அடுக்குகளில் – சேவைகள் , எண்முறை தளங்களும் செயலிகளும், வன்பொருள், அகக்கட்டமைப்பு, மற்றும் நவீன தொழில் நுட்பங்கள் என. இவை புத்தொழில்கள் வளர சிறப்பான சூழ்நிலை அமைகின்றன

  • M. முரளி
    தொழில்நுட்ப ஆலோசகர்

 

 

1 Comment

  1. தொழில் நுட்பம் பற்றிய சமீபத்திய செல்திசைகளை எளிமையாக எல்லோருக்கும் புரியும் வகையில் சுருக்கமாகத் தந்திருக்கிறார் முரளி. பாராட்டுகள்.! வாழ்த்துகள்!

Leave a Response

Right Click & View Source is disabled.

error: Content is protected !!