544views
குலைப்பு வகை அல்லது டிஸ்ரப்டிவ் தொழில்நுட்பங்கள் பற்றி ஒரு சிறிய குறிப்பு:
இந்த வகை தொழில்நுட்பங்கள் ஒரு பெரும் மாற்றத்தை சமூகத்தில் ஏற்படுத்தக்கூடியவை.
இந்த வருடம் பத்து குலைப்பு வகை தொழில்நுட்பங்கள் செல்திசையாக (trends) குறிக்கப்பட்டுள்ளன. அவை என்ன, அதன் தாக்கம் என்ன, அதில் எத்தனை புத்தொழில்கள் அந்த சந்தையில் இயங்குகின்றன என்ன என்கிற குறிப்புகளை பார்க்கலாம்
-
முப்பரிமாண அச்சு – 3D PRINTING
-
செயற்கை நுண்ணறிவு மற்றும் எந்திர அறிதல் – AIML
-
ரோபோட்டிக்ஸ் அல்லது எந்திரங்கள் – ROBOTICS
-
இணைய பாதுகாப்பு முன்னேற்றங்கள் – CYBER SECURITY ADVANCES
-
விளிம்பில் கணித்தல் – EDGE COMPUTING
-
நிகர் மற்றும் மேலதிக மெய் – VIRTUAL AND AUGMENTED REALITY
-
வீட்டிலிருந்தே வேலை எனும் புரட்சி – WORK FROM HOME REVOLUTION
-
பயனரின் குரல் – VOICE ENABLEMENT
-
தொகுதி சங்கிலி – BLOCKCHAIN
-
குவைய கணித்தல் – QUANTUM COMPUTING
நிகர் மற்றும் மேலதிக மெய்: இது ஒரு அதி நவீன தொழில்நுட்பம். கணிணி திரை, வெளியே உபகரணமாக, கருவியாக இருப்பதற்கு பதிலாக கண்ணருகே திரைகளை உருவாக்குதல ஒரு நவீன அணுகுமுறை ஆகும்.
முதலில் கூகிள் கண்ணாடி (Google Glass) 2014ல் வெளி வந்தது. இதன் அடுத்த தலைமுறைகள் தற்போது வர ஆரம்பித்து விட்டன. கண்ணிற்கு மிக அருகே, மூக்கு கண்ணாடி போன்ற உபகரணம், உரையாடல்கள் மூலம், இணையத்துடன் தொடர்பு கொண்டு குரல் மூலம் இயக்கம் ஆகியவை இதன் முக்கிய செயல்பாடுகள். ஒருவர் கண்ணின் மணியை தனி நபர் அடையாளமாக கொள்ளும் தொழில்நுட்பம் வேறு சில கண்ணாடிகளில் இணைக்கப் பட்டுள்ளது. சூழலும் இந்த கண்ணாடியிலேயே கலந்து இருப்பதால் இதையே மேலதிக மெய் எனவும் வகைபடுத்துவது உண்டு.
பல துறைகளில் இந்த நவீன கண்ணாடி புரட்சி செய்துள்ளது. மருத்துவ மனைகளில், நோயாளிகளின் மருத்துவ தரவுகளை, பல வித மருத்துவ ஆவணங்களை இணையத்தின் மூலம் உடனுக்குடன் பார்வை இடுவதிலிருந்து, கூட்டு முயற்சியில் நிபுணர்களுடன் அறுவை சிகிச்சை நடத்திடுவது வரை என பல பாய்ச்சல்களை நிகழ்த்தியுள்ளது.
கோவிட் சூழ் நிலைகளில், தூரத்திலிருந்து கண்காணிப்பு, தொடாமல் மருத்துவ ஆலோசனை என பல புதுமைகளையும் செய்துள்ளது.
தொழிற்சாலைகளில், எந்திரங்களின் பழுதடையும் தருணங்களை கணித்து, கண்ணாடியின் பார்வைகளின் மூலம் ஆணைகளை பிறப்பித்தல் முதல், பராமரிப்பிற்கு முழுமையான பணி நிறுத்தத்திற்கு பதிலாக பாதிக்க படக்கூடிய யந்திரங்களை மாத்திரம் பராமரித்தல் வரையிலான செயல் பாடுகளை திறம்பட கவனித்தல் வரை பலவித முன்னேற்றங்கள் இதன் மூலம் நிகழ்ந்துள்ளன. இதில் முக்கியம் என்னவெனில், கூகிள் கண்ணாடி மட்டுமன்றி, ஒரு கைபேசி அல்லது டேப்லெட் கணினி மூலம் கூட, இது போன்ற முன்னேற்றங்களை தகவமைக்க முடியும்.
பேஷன் (Fashion) துறையிலும் இதன் தாக்கம் இருப்பதால், கண்ணாடி உற்பத்தி செய்யும் நிறுவனங்களும், மென்பொருளில் முன்னே உள்ள நிறுவனங்களும் ஒருவித போட்டி மனப்பான்மையில் புதுமைகள் செய்து கொண்டே இருக்கின்றனர்.
சேவை மையங்களும் ஒரு புதுமையை நோக்கி பிரயாணிக்கின்றன. அதாவது மென்பொருள் வளர்ச்சி துறையில் டெவ் ஆப்ஸ் (devops) என்கிற முறையில், வளர்ச்சிகளையும், செயல்பாடுகளையும் ஒருங்கிணைத்து அதனால் அதிவேகமாக, தேவைகளுக்கு ஏற்ப புதிய கட்டமைப்புகளை மென்பொருள் திட்டங்களால் ஏற்க முடிந்தது. அதுபோல விற்பனையையும் சேவையையும் ஒருங்கிணைக்க வாய்ப்பு இருக்கிறது. புதிய தொழில் நுட்பத்தால், தொழில் நுட்பம் சார்ந்த சேவை புரிய – மேலதிக மெய் பெரிதும் உதவுகிறது. உதாரணமாக ஓர் எந்திரம் – உதாரணமாக ஜெராக்ஸ் எந்திரம் – பழுதடைந்த பகுதியை அடையாளம் காட்ட, உதிரி பாகங்களை பொருத்துவது பற்றி அறிய – டேப்லெட் கணினியும், அதிலுள்ள செயலியும் உபயோகமாகலாம். இதற்கு முன்பு போல் மிக பருமனான சேவை ஆவணங்கள் தேவையில்லை.
இதே போன்ற சேவையை மிகவும் சிக்கலான விண்வெளி கல திட்டங்களுக்கு கூட உபயோகிக்கலாம்.
இந்த அணுகுமுறை கூட்டு வளர்ச்சி, பொறியியல் வரைபடங்கள், மென்பொருள் ஒருங்கிணைப்பு, செயல்முறை திறன்கள் என வெவ்வேறு பரிமாணங்களில் அதிவேகத்தை பல் வேறு துறைகளுக்கு அளிக்கிறது.
ஒருவிதத்தில் கூகிள் மேப் செய்யும் பல பணிகள் மேலதிக மெய் என வகை படுத்த படுகின்றன. சாலையில் உள்ள டிராபிக் ஜாம் பற்றி ஆலோசனை கூறுவதிலிருந்து, பக்கத்தில் உணவகங்கள் எங்குள்ளன என்பது வரை, அல்லது குழந்தைகள் பாதுகாப்பாக செல்கிறது என்பதை தொடர்ந்து கண்காணிக்க முடிவது வரை என இயற்கை நுண்ணறிவுடன் இணைந்து செயலாற்றுகிறது. பலவித தரவுகள் குழு பெறுதல் (crowdsourcing ) மூலம் அந்தந்த சூழலில், நிலவியல் காரணிகளை உபயோகித்து துல்லியமான, பயனருக்கு உதவும் பணிகளை அடுக்கடுக்காக சாத்திய படுத்துகிறது. இது இந்த தொழில் நுட்பத்தின் பெருங்கனவை நிகழ்த்தும் முக்கிய பகுதி.
இதை தவிர தலையில் மாட்டிக் கொள்ளும் கருவியாக, நம் தலை திரும்பும் போது, அதற்கேற்ற புது காட்சியாக – நாம் ஒரு புதிய சூழலில் நுழைவது போன்ற ஒரு மாயையை உருவாக்கும் – கருவிகள் உள்ளன. இவை முற்றிலும்புதிய தொழில் நுட்பம் கொண்டவை. முதலில் பொழுது போக்கு துறையிலும், கேமிங் என்னும் மின் விளையாட்டு துறையிலும் பெரும் ஆதரவு இருக்கும் என ஆரம்பிக்க பட்டது. ஆனால் தற்போது, பயிற்சி, பேரிடர் தயார் நிலை, பேராபத்து சூழ்நிலை (அணுஉலை, கதிர்வீச்சு சூழல், இரசாயன தொழிற்சாலை விபத்து முதலியன), மனிதர்கள் இயங்க முடியாத அவல சூழ் நிலை முதலியனவற்றில் புதிய விரிவாக்கங்களை தந்து இருக்கிறது.
எல்லோருடைய மனதிலும் எழும் கேள்வி – மேலதிக மெய்க்கும் நிகர் மெய்க்கும் வித்தியாசம் உள்ளதா?
ஆம் இருக்கிறது.
நிகர் மெய் ஒரு முற்றிலும் புதிய சூழலை அளிக்கிறது. இந்த சூழலில் செயல்பாடுகள் நடக்கின்றன. நம்முடைய உண்மை சூழலிலிருந்து விடுபட்ட ஒன்றுதான் நிகர் மெய் சூழல். (இதற்கு ஒரு விதி விலக்கு உண்டு – எண்முறை இரட்டை அல்லது டிஜிட்டல் ட்வின் . நிகர் மெய்யின் ஆணைகளை ஒரு அமைப்பு அல்லது சிஸ்டமுடன் இணைக்கலாம். இப்போது, அந்த அமைப்பை தூரத்திலிருந்து இயக்கலாம்). ஒரு திரைப்படத்தின் காட்சிக்குள் நாம் செல்வது போல. பார்வையாளராக நமக்கு ஏதும் ஆவதில்லை . ஆனால் நம்மை சுற்றி இருக்கும் சூழல் மற்றும் பாத்திரங்கள் ஒரு பெரும் நாடகமாக்கத்திற்கு உள்ளாகின்றனர். இதனை 360 டிகிரி காமெரா மூலம் ஏற்படுத்தி பின் வடிவமைக்கின்றனர். புதிய சொடுக்கு படங்களில் (snapshot) – நமது, முன்னால், பின்னால் , மேலே கீழே என எல்லாப்புறங்களிலும் காட்சிகளை அனுபவிக்க முடியும். தற்போதைய திருமணங்களில் இந்த சொடுக்கு படங்களும், காணொளிகளும் அபாரமான ஆழ்ந்துணர் (immersive experience) அனுபவத்தை தரக்கூடியவை.
இந்த தொழில்நுட்பம் திரைப்படத்தில் பல கட்டமைப்புகளை மாற்றும் திறனுடையது என நிபுணர்கள் கணித்துள்ளனர்
மேலதிக மெய்யோ – கூடுதல் தரவுகளை காட்சி படுத்தவதில், நமது புரிதல் ஆழமாகிறது . உதாரணமாக – டிராபிக் அதிகமான குறிப்பை சிவப்பு தீற்றலாக உணர்த்துவது, நமது பதட்டத்தை அல்லது தீவிர உணர்வுகள் வண்ணமாகி காட்டுவது, நாம் எந்தப்புறம் திரும்பவேண்டும் என குரலில் உணர்த்துவது என பல உபகரணங்களை இணைத்து சேவை புரிகிறது. தவிர, மற்ற அமைப்புகளுடன் – உதாரணமாக பள்ளி, அலுவலகம், மருத்துவர், உணவகம் என நம் பரிமாற்றங்களை உணர்த்துவது அல்லது எச்சரிப்பது என.. தரவுகளை உணர்வு சார்ந்து வண்ணமுற காக்கின்றது.
360 டிகிரி சொடுக்கு படம்
நிகர் மெய் சூழலில், நமது உடலில், கைகளிலும், விரல்களிலும், பலவகை உணரிகள் பொருத்தப் பட்டு, மற்றொரு அமைப்பை இயக்க உதவுகிறது. சிறு யந்திரங்கள் அல்லது ட்ரோன்களை இயக்க, ஆபத்தான சூழ்நிலைகளில் தொழிற்சாலை யந்திரங்களின் பணிகளை பராமரிக்க என பல செயல்பாடுகள் முக்கியமாகிறது.
முன்பு, தொழிற்சாலையில், தலைக்கவசம் மட்டுமே பாதுகாப்பாக இருந்தது என்பது மாறி, நிரல் நிறைந்த பல உபகரணங்கள், மேலதிக மற்றும் நிகர் மெய் கொண்டு கூடுதல் பாதுகாப்பு அளிக்கிறது..
மனிதர்கள் வேலை செய்ய முடியாத அபாயகர சூழ்நிலைகள், விஷம் நிறைந்த கழிவு சூழல்கள், கழிவகற்று பணிகள் ஆகியவற்றில், டிஜிட்டல் ட்வின் என்கிற எண்முறை இரட்டை, ஒரு நவீன அணுகுமுறையை அளிக்கிறது. தவிர அதி நவீன துறையான விண்வெளி பயணம், வேற்று கிரக உலா மற்றும் ஆராய்ச்சியில், இந்த தொழில்நுட்பம் மிக முக்கிய பங்கு வகிக்கின்றது
இந்த அதி நவீன பயனர் இன்டெர்ஃபேஸ் அல்லது தொடுமுகத்தில் பல புரட்சிகள் நடத்த தயாராக உள்ளது. இதில் உபகரணங்கள், உணரிகள், தளங்கள், (நவீன) உள்ளடக்கம் (digital contents), பரப்புதல் என சேவைகள் பல தளங்களில் புத்தொழில் வழியாக நிறுவனங்கள் கிளர்ந்தெழுகின்றன. அவை கீழே உள்ள படத்தில் குறிப்பிட பட்டுள்ளன.
இது அதிவேகமாக வளரும் தொழில் நுட்ப வகையாக, ஊடுருவும் சாத்தியம் கொண்டதாகவும் கணிக்கப்பட்டு, மிக முக்கியமாக குலைப்பு வகை தொழில் நுட்பமாக கருதப் படுகிறது. இதன் தரவுகள் கீழே
வீட்டிலிருந்தே வேலை செய்யும் புரட்சி :
நாம் இந்த காலத்தில் பலவகையான நம்ப முடியாத அனுபவங்களை சந்தித்துள்ளோம். டிக்கெட் இல்லாமல் பிரயாணம். வழி தெரியவில்லை என்றால் கவலை இல்லை. கூகிள் மேப் இருக்கிறது. சமையல் வேண்டாமென்றாலும் பரவாயில்லை. ஸ்விகி இருக்கிறது. கார் வாங்க வேண்டாம். ஓலா போதும். இந்த பட்டியலில் புதிய ஒன்று.. வீட்டிலிருந்தே வேலை செய்யலாமா?
இது கோவிட் காட்டிய வழி.. மேல் தள நிர்வாகிகளுக்கு மட்டுமே விருப்பத் தேர்வாக அல்லது ஆப்ஷனாக இருந்த வீட்டிலிருந்தே வேலை பார்க்கும் என்கிற தேர்வு கோவிட்டிற்கு பிறகு எல்லாருக்குமே உரியதாகிறது.
ஐடி நிறுவனத்தில் வேலை பார்க்கும் பலருக்கு வீட்டிலிருந்து பிரயாணிக்கும் தூரமும் நேரமும் மிக அதிகமாக இருப்பது புதிய நகர்ப்புற உண்மை. அந்த நேரத்தில் ஏதாவது ஒரு புத்தகம் படிக்கலாம் அல்லது இசை கேட்கலாம் என்று இருந்தாலும் பெரும்பாலான நேரங்களில் அது அரட்டை ஆகவும் தூக்கமாக மாறிவிடுகிறது. சில சமயம் மென்பொருள் வழங்கல் அல்லது டெலிவரி மைல்கல் வரும்போது வீடு திரும்புவது வெகுநேரம் ஆகிவிடும். மீண்டும் காலை வேலையை தொடங்க ஆரம்பிக்கவேண்டும். இது பல தொழில்சார் நிபுணர்கள் அல்லது ப்ரொபஷனல்களுக்கு வேலை மற்றும் வாழ்க்கையின் சமன்பாட்டை அதிகமாக குலைத்துவிடுகிறது.
இதுவே பெண்களாக இருந்தால் மேலும் பல சிக்கல்கள். வேலைப்பளு வீட்டிலும் வெளியிலும் அதிகமாகவே இருக்கிறது.
இந்தத் தருணத்தில் கோவிட்டின் விதிமுறைகள் அலுவகங்களில் கடைப்பிடிக்கப்படும் போது அனைவரும் வீட்டில் இருந்தே பயனுற வேலை செய்வதற்கான கட்டமைப்புகள் மெதுவாக தொடங்க ஆரம்பித்தன.
இணையமும் பிராட்பேண்ட் தொழில்நுட்பமும் ஜும் மீட்டிங் செயலியும் மிகவேகமாக வீட்டிலிருந்தே ஆபீஸ் வேலை செய்வதை ஒருங்கமைத்தன.
ஒரு சில சிறு தொல்லைகள் இருந்தாலும் ஆஃபீஸை விட அதிக திறனுடன் வீட்டில் இருந்தே வேலை செய்வது சாத்தியம் ஆகிவிட்டது. வீட்டிலேயே இருப்பதால் பலருக்கு வேலை வாழ்க்கையின் சமன்பாடு சற்று வலுப்பெற்றது.
இதில் வேறு சில சிக்கல்கள் இல்லாமல் இல்லை வீட்டிலிருந்து குடும்பத்தை பார்த்துக்கொள்ளும் பெண்மணிகள் அதிக வேலைக்கு ஆட்பட்டனர். வேலை வாழ்க்கை சமன்பாடு சற்று சிக்கலான தளத்திற்கு நகர்ந்தது. வீட்டிலேயே இருந்தால் கூட எவ்வளவு நேரம் குழந்தைகளுக்கு ஒதுக்க முடிகிறது என்பது குறைவாகவே இருக்கிறது.
இருந்தாலும் நீண்ட நேரம் பயணம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்பது ஒரு பெரும் வரமாகவே அமைந்தது. நிறுவனத்தில் உள்ள பலர் 8 மணி நேரத்திற்கு அதிகமாகவே – குறைந்தபட்சம் 10 அல்லது 11 மணி நேரம் வேலை செய்வதாக பதிவு செய்துள்ளார்கள். இது கம்பெனிக்கு சாதகமாகவே அமைந்தது.
இந்த சூழ்நிலையில் நிறுவனங்களுக்கு வேறொரு லாபம் கிடைத்தது. ஆபீஸில் உள்ள தொழிலாளர்களுக்கு அமர இடம், தகவல் தொடர்பு தொழில்நுட்ப செலவுகள் ஆகியவை அவர்கள் சம்பளத்தில் இரண்டு பங்கு ஆவதாக பல தகவல்கள் தெரிவிக்கின்றன. வீட்டில் இருந்தே வேலை செய்வதை நீண்டநாள் திட்டமாக நிறுவனங்கள் மேற்கொண்டால், இந்த செலவு அவர்களுக்கு நிச்சயமாக சேமிப்பாக வாய்ப்பு உண்டு.
அநேகமாக முக்கிய தொழிலாளர்கள் அனைவருக்கும் மடிக்கணினியும் இணைய தொடர்பும் உள்ளதால் அவர்கள் வீட்டை ஆபீஸ் ஆக உபயோகிப்பதில் ஒரு திறன் உண்டு.
கோவிட்டினால் தாக்கமும் அந்தரங்க இழப்புகளும் நிறைய தொழிலாளர்களை சற்று அதிகமாகவே யோசிக்க செய்துள்ளது. சிலர் வேலை செய்வதை நிறுத்தி விடவும் வேறு சிலர் வேலை மாற்றத்தை முன்னெடுக்கவும் தொடங்கியதால் ஒவ்வொரு கம்பெனியிலும் அல்லது நிறுவனத்திலும் குறைந்தபட்சம் இருபதிலிருந்து முப்பது சதவிகிதம் தொழிலாளர்கள் வேலையை விட்டு நீங்கலாயினர். இதை மாபெரும் ராஜினாமா (The great resignation) என அழைக்கின்றனர். இது உலகளாவிய நிகழ்வு.
இந்தத் தருணத்தில் பல நிறுவனங்கள் வேறு விதமாக சிந்திக்க தொடங்கியுள்ளார்கள். தொழிலாளர்களை பங்கு நோக்கம் அல்லது ரோல் சார்ந்து வேலைக்கு அமர்த்துவதற்கு பதிலாக பணி சார்ந்தும் தேவைக்கு ஏற்ப நேரத்திற்கு வேலை செய்யும் பார்க்கவும் நியமிப்பதில் ஒரு திறன் இருப்பதை உணர்ந்து கொண்டனர். இந்த நவீன யுகத்தில் பல அலுவலர்கள் வேலை நேர காலத்தில் மேலாளரை சந்திக்காமலேயே கூட பணியை முடித்து அடுத்த பகுதிக்கு செல்ல வாய்ப்பு இருப்பது ஒரு ஆச்சரியமான விஷயமாக இருக்கிறது.


புரிய வைப்பது சுலபமல்ல என்று நினைக்கக் கூடிய தொழில் நுட்பங்களைக் கூட எளிமையாக தமிழ்ப் படுத்தியதற்கு நன்றி! Digital Divide க்கு எண்முறை பள்ளத்தாக்கு நல்ல மொழி பெயர்ப்பு! இலக்கிய பிரயோகங்கள் தரத்தை உயர்த்துகின்றன!