18 சிறுவர்கள் தீயில் உடல் கருகி பலி ! தற்காப்பு கலைகள் கற்று தரும் பள்ளியில் பயங்கரம் !
சீனாவில் தற்காப்பு கலைகள் கற்று தரும் பள்ளியில் பயங்கர தீ விபத்தில் 18 சிறுவர்கள் உடல் கருகி பலியாகினர்.
மத்திய சீனாவில் உள்ள ஹெனன் மாகாணத்தின் ஷுவாங்கியு நகரில் ‘மார்ஷியல் ஆர்ட்ஸ்’ எனப்படும் தற்காப்பு கலைகளை கற்று தரும் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இங்கு 7 முதல் 14 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் 34 பேர் வளாகத்திலேயே தங்கியிருந்து தற்காப்பு கலைகளை கற்று வந்தனர்.
இந்த நிலையில் நேற்று அதிகாலை இந்த பள்ளிக்கூடத்தில் திடீரென தீப்பிடித்தது. அப்போது மாணவர்கள் அனைவரும் பள்ளி கட்டிடத்தின் முதல் தளத்தில் உள்ள அறையில் அயர்ந்து தூங்கி கொண்டிருந்தனர். மளமளவென கொழுந்துவிட்டு எரிந்த தீ கண்ணிமைக்கும் நேரத்தில் பள்ளிக்கூடம் முழுவதிலும் பரவியது.
தீ பரவுவதை அறிந்து திடுக்கிட்டு எழுந்த மாணவர்கள் பயத்தில் அலறி துடித்தனர். தீ நாலாபுறமும் சூழ்ந்து கொண்டதால் அவர்களால் பள்ளிக்கூடத்தை விட்டு வெளியேற முடியாமல் போனது. இதனிடையே அக்கம்பக்கத்தினர் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள், தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.
எனினும் இந்த சம்பவத்தில் 18 பேர் தீயில் சிக்கி பலியானார்கள். 16 பேர் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பலியான மாணவர்களில் பெரும்பாலனோர் 7 முதல் 16 வயதுடையவர்கள். விபத்தை தொடர்ந்து பள்ளியின் மேலாளர் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் சீனாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.