இந்தியாவிற்கு சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி தோல்வியை சந்தித்தது.
இதையடுத்து, மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் தற்போது விளையாடி வருகிறது. முதல் டி20 போட்டியில் இந்திய அணி அபாரமாக வெற்றி பெற்றது.
நேற்று இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 2-வது டி20 போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்களை எடுத்தது. இதில் விராட் கோலி மற்றும் ரிஷப் பண்ட் அரைசதம் அடித்தனர். வெங்கடேஷ் ஐயர் 33 ரன்கள் எடுத்தார். இதையடுத்து, 186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி, தொடக்கத்திலேயே தடுமாறி 20 ஓவர் முடிவில் 178 ரன்களை மட்டுமே எடுத்தது.
இதனால் இந்திய அணி 8 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றதுடன், டி20 தொடரையும் 2 – 0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.
இந்நிலையில், வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக பெற்ற வெற்றியின் மூலம், டி20 போட்டிகளில் இந்திய அணி 100ஆவது வெற்றியை பதிவு செய்துள்ளது. இந்தப் பட்டியலில் முதல் இடத்தில் பாகிஸ்தான் உள்ளது. அந்த அணி 118 டி20 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.