மகாராஷ்டிர மாநிலம், யவத்மால் மாவட்டம் புல்சவாங்கி கிராமத்தைச் சேர்ந்தவர் ஷேக் இஸ்மாயில் ஷேக் இப்ராஹிம் (24). 8-ம் வகுப்புடன் பள்ளி செல்வதை நிறுத்தியுள்ளார், தனது மூத்த சகோதரரின் காஸ் வெல்டிங் கடையில் வேலை செய்து வந்தார். ஸ்டீல் மற்றும் அலுமினியம் தகடுகளைக் கொண்டு அலமாரி, கூலர்கள் உள்ளிட்ட பொருட்களை தயாரிக்க கற்றுக் கொண்டார்.
இதுகுறித்து அவரது நண்பர் சச்சின் உபாலே கூறும்போது, ‘3 இடியட்ஸ் திரைப்படத்தில் வரும் ராஞ்ச்சோ கதாபாத்திரத்தால் ஈர்க்கப்பட்ட இப்ராஹிம், ஹெலிகாப்டர் தயாரிக்கும் முறையை யூடியூபில் பார்த்து தெரிந்து கொண்டார். பின்னர் மாருதி 800 கார் இன்ஜின் உள்ளிட்ட ஹெலிகாப்டர் தயாரிப்புக்கு தேவையான பொருட்களை திரட்டினார். 2 ஆண்டு முயற்சிக்குப் பிறகு ஹெலிகாப்டரை தயாரித்தார்.
வரும் சுதந்திர தினத்தன்று இதைக் காட்சிப்படுத்த விரும்பினார். இதற்காக தனது கடைக்கு அருகே கடந்த 10-ம் தேதி தான் தயாரித்த ஹெலிகாப்டரில் பைலட் இருக்கையில் அமர்ந்து பறக்கத் தொடங்கினார். அப்போது ஒரு இறக்கை மற்றொரு இறக்கையின் மீது இடித்து உடைந்தது. அதில் உடைந்த ஒரு பாகம் இப்ராஹிமின் தொண்டையில் வெட்டியதில் அவர் நிலைகுலைந்து தரையில் விழுந்தார். உடனடியாக அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். ஆனால் அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்’ என்றார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.