இந்தியாவில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில், புதுடெல்லி மற்றும் ஹரியானாவில் கொரோனா அதிகரிப்பு மற்றும் ஒமைக்ரான் வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஹரியானா மாநில அரசு புதிய கட்டுப்பாடுகளை அமல்படுத்தி உள்ளது.
இந்நிலையில் ஹரியானா மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்டுள்ள உத்தரவில், குர்கான் நகரம் மற்றும் ஹரியானாவின் ஃபரிதாபாத், அம்பாலா, பஞ்ச்சூலா மற்றும் சோனிபட் ஆகிய மாவட்டங்களில் சினிமா அரங்குகள் மற்றும் விளையாட்டு வளாகங்கள் மூடப்படும். அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் 50 சதவீத பணியாளர்களுடன் செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மால்கள் மற்றும் சந்தைகள் மாலை 5 மணி வரை திறந்திருக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. மதுவிற்பனை பார்கள் மற்றும் உணவகங்கள் 50 சதவீத இருக்கைகளுடன் செயல்பட அனுமதி. மாநிலம் முழுவதும் உள்ள காய்கறிச் சந்தைகள், பொதுப் போக்குவரத்து பிற இடங்களில் முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் இந்த கட்டுப்பாடுகள் ஜனவரி 2 முதல் ஜனவரி 12 வரை நடைமுறையில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.