“ஸ்ரீ காகன்னை ஈஸ்வரர் திருக்கோயில்” பிரம்மரிஷிமலை அடிவாரம், எளம்பலூர் கிராமம், பெரம்பலூர் மாவட்டம்
842
மகா சக்தி வாய்ந்த இந்த மலை திருச்சி, பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ளது. பிரம்மரிஷி என்ற பெயருடன் இருக்கும் இம்மலையில் 210 சித்தர்கள் வாசம் செய்வதாக ஐதீகம். இம்மலை மனம், புத்தி, சித்தி, ஆங்கார தத்துவத்தைக் கொண்டது. இந்திரன், எமன், அக்னி, நிருதி, வருணன், வாயு குபேரன், தேவரிஷி, சித்தர்கள் பூஜை செய்து, காக புஜண்டர் மகரிஷி அருட்கடாக்ஷம் பெற்ற இடம் இத் திருட்தலம். அழுகினி, உதரவேங்கை, ஏரழிஞ்சி, ரோம விருட்ஷம், கருநெல்லி போன்ற எண்ணற்ற மூலிகைகளை கொண்டது இம்மலையாகும். மூலிகை வாசம் வீசுவதால் நம் தேகத்தில் படும் மாத்திரத்தில் சகல வியாதிகளையும் போக்கி விடுகிறது.
போதும் என்று சொல்லச் சொல்லும் ஒரே தானம் வயிறு நிறைத்தல் தானம் ஆகும். தர்மம் செய்தவர்களுக்கு முகம் தெரியாதவர்களின் வாழ்த்தும், புண்ணியமும் வந்து சேரும் என்ற சொல்லுக்கு இம்மலையில் வாழும் அன்னை சிட்தர் குடும்பமே சாட்சியாக இருக்கிறது. நித்திய அன்னதானம் இம்மலையின் சிறப்பாகும்.
இம்மலையில் தினம் காலையும், மாலையும் 210 மகா சித்தர்கள் யாகமும், 108 லட்சுமி பூஜையும், 108 மூலிகையுடன் நடைபெறுகிறது. இந்த யாகத்தில் இயற்கை சீற்றத்தில் இருந்து மக்களைக் காக்க கூட்டுப் பிரார்த்தனைகள் அன்னை சித்தரின் அருளாசியுடன் நடைபெறுகிறது. மலைக்கு வரும் பக்தர்கள் யாகத்தில் பங்கு கொண்டு சித்தர்களின் பரிபூரண அருளைப் பெறலாம்.
இம்மலையில் இன்னொரு சிறப்பு என்னவென்றால் தினமும் மாலை வேளையில் மலை உச்சியில் ஐந்து வகை எண்ணெய் – நெய், விளக்கெண்ணெய், வேப்பெண்ணெய், நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் கலந்து ஜோதி ஏற்றப்படுகிறது. இதனால் அங்கு வரும் பக்தர்களுக்கு சகல தடைகளும் நீங்கி நினைத்த காரியம் கைகூடுவதுடன், வாழ்க்கை ஜோதியைப் போல் பிரகாசிக்கும்.
கார்த்திகை மகா தீபத் திருவிழா
ஒவ்வொரு கார்த்திகை தீபத்தன்று திருஅண்ணாமலையார் கோவிலில் மலை மீது தீபம் ஏற்றி வழிபடுவது போல இத் திருவிழாவன்று. பிரம்மரிஷிமலை மீது 210 சித்தர்கள் நினைவாக 210 மீட்டர் திரியில், சுத்தமான முறையில் 210 கிலோ நெய் தயாரித்து மலை மீது தீபம் ஏற்றுவார்கள். குறைந்தது 10,000 பக்தர்கள் அம்மலையில் கூடுவது வழக்கம். மகாதீபம் ஏற்றப்பட்டு 210 வான வேடிக்கை நடைபெறும். ஐந்தாயிரம் மெய்யன்பர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும். தருமவான்கள், பிரம்மரிஷி மலை யின் திருவிழாவில் கலந்து கொள்வதுடன் வரும் பக்தர்களுக்கு தண்ணீர் வசதி, பானகம், மோர், சுக்குகாப்பி முதலியவைகளை தருமம் செய்கிறார்கள்.
இத் திருக்கோயிலில் செவ்வாய், வெள்ளி, பிரதோஷம், அமாவாசை, பௌர்ணமி அன்று காலை கோபூஜை, நடைபெறுகிறது.
இம்மலை அடிவாரத்தில் தலையாட்டி சித்தர் அவர்களின் ஜீவசமாதி உள்ளது. பிரம்மரிஷி மலையில் தினசரி மூன்று வேளை மகா யாகம், அன்னதானம், சாதுக்களுக்கு வஸ்திர தானம் ஆகியன நடைபெறும்.
சஷ்டி, கிருத்திகை – முருகனுக்கு அபிஷேகபூஜை, பிரதோஷம் – நந்தி அபிஷேக பூஜை, செவ்வாய், வெள்ளி – நாகர் அபிஷேக பூஜை. சனி, ஞாயிறு – நவக்கிரக அபிஷேக பூஜை, சங்கடஹரசதுர்த்தி- விநாயகர் அபிஷேக பூஜை, தேய்பிறை அஷ்டமி – பைரவர் அபிஷேக பூஜைகள் நடைபெறும்.
செப்டம்பர் – அக்டோபர் மாதத்தில் ஒவ்வொரு வருடமும் ஆவணி அமாவாசை முதல் புரட்டாசி மாதம் வரை 51 நாள் கோ பூஜை தினமும் காலையில் நடைபெறும். பூஜையில் சுமங்கலிகளுக்கு புடவை, மங்கள பொருட்கள் வழங்கப்படும்.
இங்கு வாழும் அன்னை சித்தர் வாக்குபடி 2000- ல் இருந்து பல அதிசயங்களை பக்தர்கள் உணர்ந்துகொண்டுதான் வருகிறார்கள். நம்மூர் மக்கள் மட்டுமல்லாமல் வெளிநாட்டினரும் இம்மலைக்கு வந்து தங்கி தனது சேவைகளை செய்து வருகிறார்கள். இம்மலையில் நவகிரகங்கள் தத்தம் துணையோடு இருப்பதால், கணவன்- மனைவிக்குள் ஏற்படும் பல பிரச்சனைகளை இங்கு வந்து பூஜை செய்வதால் நிவர்த்தி ஆகிக் கொண்டு தான் இருக்கிறது. நேர்மறை ஆற்றலையும், சூட்சும சக்தியையும் கொண்ட இந்த இடத்திற்கு ஒரு முறை நாமும் செல்வோம்.
குரு சரணம் : ஒன்றே கடவுள்! அறிவே சற்குரு! உணர்வே பிரம்மம்! சற்குருவே கடவுள்! ஸ்ரீ அகண்ட பரிணபூரணமான சற்குருவின் திருவடிகளே சரணம்!
-
‘அன்பே சிவம்’ சரஸ்வதி
add a comment