இந்தியா

வேகமாக பரவும் ஒமைக்ரான்: தற்காலிக மருத்துவமனைகளை தயார்படுத்தவும்.. மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

59views

இந்தியாவில் முதல்முறையாக கர்நாடக மாநிலத்தில் கடந்த மாதம் 2-ம் தேதி ஒமைக்ரான் தொற்று உறுதிசெய்யப்பட்டது.

இது படிப்படியாக அதிகரித்து, டிசம்பர் 21-ம் தேதி 200 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. சனிக்கிழமை நிலவரப்படி, 1,431-ஆக உயர்ந்துள்ளது.

நாடு தழுவிய தினசரி கொரோனா பாதிப்பும் படிப்படியாக உயர்ந்துள்ளது. கடந்த 27-ம் தேதி ஒரே நாளில் 6,531 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. இது படிப்படியாக உயர்ந்து, 31-ம் தேதி 16,764-ஆக அதிகரித்தது. மேலும், கடந்த 70 நாட்களில் இல்லாத அளவுக்கு சனிக்கிழமை 22,775-ஆக அதிகரித்துள்ளது.

மும்பை, டெல்லி, கொல்கத்தா, சென்னை, பெங்களூரு நகரங்களில் வேகமாக பரவிவருவதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், மகாராஷ்டிராவில் 10 அமைச்சர்கள் மற்றும் 20 எம்எல்ஏ-க்களுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக மாநில துணை முதலமைச்சர் அஜித் பவார் தெரிவித்துள்ளார்.

இந்த சூழலில் அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கு மத்திய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் கடிதம் எழுதியுள்ளார். அதில், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தற்காலிக மருத்துவமனைகளை ஏற்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

தனியார் துறையினர், அரசுசாரா அமைப்பினர் உள்ளிட்டோரின் பங்களிப்புடன் இதனை ஏற்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

லேசானது முதல் மிதமான பாதிப்பு கொண்டவர்களை தங்கவைப்பதற்காக விடுதி அறைகளை தயார் செய்ய வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும், வீட்டுத் தனிமையில் இருப்போரை சிறந்த முறையில் கண்காணிக்க வழிமுறையை உருவாக்க வேண்டும்.. மாவட்ட மற்றும் வார்டு அளவில் கட்டுப்பாட்டு அறைகளை செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்றும் ராஜேஷ் பூஷண் அறிவுறுத்தியுள்ளார்.

பிரிட்டனில் ஒரே நாளில் ஒரு லட்சத்து 90 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

எனினும், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான புதிய கட்டுப்பாடுகளை கடைசி ஆயுதமாகவே பயன்படுத்த உள்ளதாக அந்நாட்டு சுகாதாரத் துறை அமைச்சர் சஜித் ஜாவித் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, இஸ்ரேலில் புளோரோனா என்ற பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அதாவது, கொரோனா மற்றும் காய்ச்சல் வைரஸ் ஆகியவை இணைந்து தாக்கும் நிலையே புளோரோனா என்று அழைக்கப்படுகிறது.

கர்ப்பிணி பெண் ஒருவருக்கு இந்தத் தொற்று உறுதிசெய்யப்பட்டதாக வியாழக்கிழமையே செய்திகள் வெளியாகின.

புளோரோனா பாதிப்பால், இரண்டு வைரஸ்கள் ஒரே நேரத்தில் உடலுக்குள் புகுவதால், நோய்எதிர்ப்பு சக்தி கட்டமைப்பு சீர்குலைவதாக கெய்ரோ பல்கலைக் கழக மருத்துவர் நஹ்லா அப்தில் வஹாப் தெரிவித்துள்ளார்.

கடந்த சில வாரங்களில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக இஸ்ரேல் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

எனவே, புளோரோனா பாதிப்பு குறித்து ஆய்வுசெய்ய வேண்டியுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, ஆப்கானிஸ்தானுக்கு 5 லட்சம் கோவாக்சின் தடுப்பூசிகளை இரண்டாவது கட்ட உதவியாக இந்தியா வழங்கியுள்ளது.

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!