விவசாயிகள் போராட்டத்தின் அடுத்தகட்ட நடவடிக்கை என்னஎன்பது தொடர்பான முக்கிய அறிவிப்பு இன்று வெளியாகும் என கூறப்பட்டுள்ளது.
மத்திய அரசு புதிதாக கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஓராண்டு காலமாக விவசாயிகள் நடத்திய போராட்டத்தின் பலனாக நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் முதல் நாளில் வேளாண் சட்டம் ரத்து செய்வதற்கான மசோதா தாக்கல் செய்யப்பட்டு, வேளாண் சட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் விவசாயிகள் போராட்டம் தொடர்ந்து கொண்டே தான் உள்ளது.
அதாவது இந்த போராட்டத்தின்போது உயிரிழந்த விவசாயிகளுக்கு இழப்பீடு, குடும்பத்தினருக்கு அரசு வேலை, வேளாண் பொருட்களுக்கு குறைந்த பட்ச ஆதார விலை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் அடுத்த கட்டமாக விவசாயிகள் போராட்டம் தொடருமா? என்ன செய்யப்போகிறார்கள் என்பது குறித்து விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் ஏற்கனவே ஆலோசனை மேற்கொண்டு வந்த நிலையில், விவசாய போராட்டத்தின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகும் என விவசாய சங்கத் தலைவர்களில் ஒருவரான குல்வந்த் சிங் அவர்கள் தெரிவித்துள்ளார்.