விரைவில் வெளியாகும் தேர்தல் அறிவிப்பு: புதுவை மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காலம் அக்டோபரில் நிறைவு- அடுத்த வாய்ப்புக்கு என்.ஆர்.காங் – பாஜக போட்டி
புதுச்சேரி மாநிலங்களவை உறுப்பினர் பதவிகாலம் அக்டோபரில் நிறைவடைய உள்ளதால் விரைவில் தேர்தல் அறிவிப்பு வெளியாகவுள்ளது. இப்பதவி ஆளுங்கட்சி கூட்டணியிலுள்ள என்.ஆர்.காங்கிரஸுக்கா, பாஜகவுக்காக என்ற கேள்விக்கான விடை விரைவில் தெரியவரும்.
புதுச்சேரி மாநிலங்களவை உறுப்பினராக அதிமுகவை சேர்ந்த கோகுலகிருஷ்ணன் உள்ளார்.இவர் முதல்வர் ரங்கசாமியின் நெருங்கிய நண்பர். கடந்த மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலின்போது கோகுலகிருஷ்ணனைஎம்பியாக்க ரங்கசாமி விரும்பினார். ஆனால், அப்போது என்.ஆர்.காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள் தரப்பில் எதிர்ப்பு கிளம்பியதால், யாரும் எதிர்பார்க்காத வகையில்என்.ஆர்.காங்கிரஸைச் சேர்ந்த தனது நண்பர்கோகுலகிருஷ்ணனை அதிமுக உறுப்பினராக்கி, புதுச்சேரி மாநிலங்களவை எம்பி.,யாக்கினார் ரங்கசாமி. எம்பி கோகுலகிருஷ்ணனின் பதவிக் காலம் அக்டோபர் 6-ம் தேதியோடு முடிவடைகிறது. புதிய எம்பியை தேர்வு செய்ய தேர்தல் நடைபெற உள்ளது.
வழக்கமாக தேர்தலுக்கு ஒரு மாதத்துக்கு முன்பு அறிவிப்பு வெளியிடப்படும். இதனால் ஓரிரு நாட்களில் மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாக உள்ளது.
2015ல் என்ஆர்.காங்கிரஸ் ஆட்சியில், கூட்டணிக் கட்சியான அதிமுகவுக்கு எம்பி பதவி தரப்பட்டது. தற்போது நடைபெற உள்ள தேர்தலில் மாநிலங்களவை உறுப்பினர் பதவியை என்ஆர்.காங்கிரஸைச் சேர்ந்தவருக்கு வழங்க வேண்டும் என எம்எல்ஏக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
எம்பி பதவியை பெற முன்னாள் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தீவிரம் காட்டி வருகிறார். இதற்காக முதல்வரிடத்தில் மிக நெருக்கம் காட்டி வருகிறார். மேலும் அவர் சுயேச்சை எம்எல்ஏக்களின் ஆதரவை பெறும் முயற்சியிலும் தீவிரமாகியுள்ளார். இதற்கிடையே, மாநிலங்களவையில் பெரும்பான்மையை உயர்த்த பாஜகவும் திட்டமிட்டுள்ளது. இதன் அடிப்படையில் புதுவை மாநிலங் களவை உறுப்பினர் பதவியை பெற பாஜகவும் முயற்சித்து வருவதாக கூட்டணி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
‘மாநிலங்களவை உறுப்பினர் பதவி தொடர்பாக பாஜக தரப்பில் யாரும் தன்னிடம் இதுவரை பேசவில்லை’ என்று முதல்வர் ரங்கசாமி தெரிவிக்கிறார். புதுவையை பொறுத்தவரை ஆளும் கட்சியான என்ஆர்.காங்கிரஸ், பாஜக கூட்டணி வேட்பாளரே எம்பியாக முடியும் என்ற நிலை உள்ளது.
தேர்தல் அறிவிப்பு வெளியானவுடன் இதற்கான பேச்சுவார்த்தை விறுவிறுப்படையும்.