2021 ஆம் ஆண்டு 13 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள விராட் கோலி வெறும் 353 ரன்கள் மட்டுமே இதுவரை குவித்துள்ளார். இந்த ஆண்டு இவருடைய டெஸ்ட் ஆவரேஜ் 27.15 ஆக மட்டுமே உள்ளது. அதேபோல விராட் கோலி சர்வதேச அளவில் சதம் அடித்து இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. 2019ஆம் ஆண்டு பங்களாதேஷ் அணிக்கு எதிராக கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் அவர் கடைசியாக தன்னுடைய சர்வதேச சதத்தை அடித்தது குறிப்பிடத்தக்கது.
அதன் பின்னர் தற்போது வரை ஒரு சர்வதேச சதம் அடிக்க விராட் கோலி தவறி வருகிறார் என்பது இந்திய ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வேதனையாக நீண்டு கொண்டே வருகிறது. இந்நிலையில் விராட் கோலி குறித்து நம்பிக்கை தரும் விதமாக ஆஸ்திரேலியா வீரர்பிராடு ஹாக் ஒரு சில விஷயங்களை தற்பொழுது பகிர்ந்துள்ளார்.
மூன்றாவது டெஸ்ட் போட்டியில் நம்பிக்கையை ஏற்படுத்திய விராட் கோலி
இரண்டு ஆண்டுகளுக்கு முன் விராட்கோலி விளையாடிய விதம் யாராலும் மறந்துவிட முடியாது. ஆனால் தற்போது அவர் சமீபத்தில் சொதப்பி வருகிறார். டெஸ்ட் போட்டிகளில் 50 இன்னிங்ஸ்களுக்கு மேலாக விளையாடி ஒரு சதம் கூட அடிக்க முடியாமல் விராட் கோலி திணறி வருகிறார். இருப்பினும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விராட் கோலி இந்திய அணிக்கு 2-வது இன்னிங்சில் அரைசதம் குவித்து சிறு நம்பிக்கையை ஏற்படுத்தினார்.
அதற்கு முன்னர் விராட் கோலி விளையாட விதத்தை ஒப்பிட்டுப் பார்க்கையில் அந்த ஆட்டம் சற்று நம்பிக்கை தரும் விதமாக இருந்தது என்றும், அவருக்கு எந்த பந்தை எப்படி கையாளவேண்டும் என்று பழையபடி தெரிந்து விட்டதாகவும் பிராட் ஹாக் தற்போது கூறியுள்ளார். மேலும் பேசிய அவர் கூடிய விரைவில் விராட்கோலி சதம் அடிக்க அதிக வாய்ப்பு உள்ளதாகவும் அதற்கான நேரம் நீண்ட தூரத்தில் இல்லை என்றும் கூறியுள்ளார்.
விராட் கோலி போன்ற ஒரு வீரர் விளையாடும் விதத்தைப் பார்க்கையில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணி எப்பொழுதும் பயப்படும் என்றும், அவரது தலைமையில் இந்திய அணி செய்த விஷயங்களை அவ்வளவு எளிதில் இந்த இரு அணிகள் மறந்து விடாது என்றும் கூறியுள்ளார். எந்த ஒரு வீரருக்கும் ஒரு கட்டத்தில் தோல்வி வரும் ஆனால் அந்த தோல்வியிலிருந்து அவர் எப்படி மீட்கிறார் என்பதுதான் முக்கியம் என்றும், விராட் கோலி தற்பொழுது சரிவில் இருக்கிறார். கூடிய விரைவில் இந்த சரிவில் இருந்து மீண்டு தன்னுடைய பழைய அதிரடியான ஆக்ரோஷத்தை வெளிப்படுத்துவார் என்றும் பிராட் ஹாக் இறுதியாக நம்பிக்கை தரும் விதமாக கூறி முடித்தார்.