விம்பிள்டன் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரில் இன்று நடைபெற உள்ள மகளிர் ஒற்றையர் பிரிவு பைனலில் ஆஸி.யின் ஆஷ்லி பார்தி, செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா மோத உள்ளனர். முதல் அரையிறுதியில் ஜெர்மனியின் ஏஞ்சலிக் கெர்பருடன் (25வது ரேங்க்) மோதிய நம்பர் 1 வீராங்கனை பார்தி 6-3, 7-6 (7-3) என நேர் செட்களில் வென்றார். 2வது அரையிறுதியில் பிளிஸ்கோவா (13வது ரேங்க்) 5-7, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் பெலராஸ் வீராங்கனை அரினா சபலெங்காவை (4வது ரேங்க்) வீழ்த்தினார். இன்று மாலை நடைபெறும் இறுதி ஆட்டத்தில் பார்தி – பிளிஸ்கோவா மோதுகின்றனர். இருவரும் முதல் முறையாக விம்பிள்டன் பைனலுக்கு முன்னேறியுள்ளனர். விம்பிள்டனில் புதிய சாம்பியனாக இருவரும் வரிந்துகட்டுவதால், ஆட்டத்தில் அனல் பறப்பது உறுதி. பார்தி – பிளிஸ்கோவா 7 முறை மோதியுள்ளதில் பார்தி 5 – 2 என முன்னிலை வகிப்பது குறிப்பிடத்தக்கது.