நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள பெங்களூரு சென்ற விஜய் சேதுபதியை விமான நிலையத்தில் அடையாளம் தெரியாத நபர் தாக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
அந்த வீடியோவும் இணையத்தில் வெளியானது. அது குறித்து விஜய் சேதுபதி விளக்கம் அளித்துள்ளார்.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய அந்த நபர் தனது பெயர் மகா காந்தி என்று கூறியுள்ளார். விஜய் சேதுபதி தேசிய விருது வாங்கியதற்காக அவருக்கு வாழ்த்து சொன்னாராம். பிறகு குரு பூஜையில் கலந்து கொண்டு வழிபட்டீர்களா என்று கேட்டிருக்கிறார். அதற்கு விஜய் சேதுபதி யார் குரு என்று கேட்டிருக்கிறார். அந்த சமயத்தில் வாக்குவாதம் முற்றி, விஜய் சேதுபதியுடன் இருந்தவர்கள் தன்னை தாக்கியதாகவும், தான் திருப்பி தாக்கியதாகவும் கூறியுள்ளார்.
விஜய் சேதுபதியின் விளக்கம் வேறு மாதிரியாக உள்ளது. தாக்கிய நபர் குடிபோதையில் இருந்ததாகவும், அவர் மாஸ்க் அணிந்திருந்ததால் அது வெளியே தெரியவில்லை என்றும், செல்போனில் ஒருவர் வீடியோ எடுத்த விவகாரம் ஊதி பெரிதாக்கப்பட்டதாகவும், தாக்கிய நபரை காவல் நிலையம் அழைத்துப் போய் அப்போதே பிரச்சனை தீர்க்கப்பட்டது எனவும் கூறியுள்ளார்.
நான் பாதுகாவலர்களுடன் பயணம் செய்வதில்லை. என்னுடைய நெருங்கிய நண்பரைத்தான் அழைத்துச் சென்றேன். பாதுகாவலர்களை வைத்துக் கொள்ள எனக்கு விருப்பமில்லை. நான் மக்களை சந்திக்க வேண்டும், அவர்களுடன் பேச வேண்டும் என்று விஜய் சேதுபதி மேலும் கூறியுள்ளார்.
பொதுவெளியில் தன்னை அறியாத ஒருவரிடம் குரு பூஜைக்கு சென்று வழிபட்டீர்களா என்று கேட்பது அத்துமீறல். குரு பூஜை என்பது தனிப்பட்ட சாதியினர் மட்டுமே நடத்தும் ஒரு நிகழ்வு. அதில் கலந்து கொள்ள வருகிறவர்கள் எப்படிப்பட்டவர்கள், எப்படி நடந்து கொள்வார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். அதில் கலந்து கொள்ள வந்த இளைஞர்கள் நடத்திய அத்துமீறல்களுக்காக பலரை காவல்துறை கைது செய்து வழக்கு தொடர்ந்திருக்கிறது. அப்படியொரு நிகழ்வு குறித்து தன்னை அறியாத விஜய் சேதுபதியிடம் கேட்பது அத்துமீறிய செயலே.
மேலும், குறிப்பிட்ட சாதியினரின் ஆதரவு தனக்கு கிடைக்கவும், அவர்களை விஜய் சேதுபதிக்கு எதிராக திருப்பி விடவும் அந்த நபர் குரு பூஜை குறித்து கேட்டதாக பொய்யாக சொல்லியிருக்கவும் வாய்ப்புள்ளது. எப்படியிருப்பினும் தவறு விஜய் சேதுபதி மேல் அல்ல, அந்த நபரிடம் தான் என்பது ஓடி வந்து விஜய் சேதுபதியை தாக்க முயலும் அவரது செய்கையிலேயே தெரிந்துவிடுகிறது. அவர் மீது விஜய் சேதுபதி வழக்கு தொடராதது அவரது பெருந்தன்மை.
இந்த நிகழ்வை குறிப்பிட்ட சாதியினருக்கு எதிரானவர் விஜய் சேதுபதி என்று திரித்து சாதி, மத அடிப்படைவாதிகள் பேசியும், எழுதியும் வருகின்றனர். இது கண்டிக்கத்தக்கது.