ஸ்பெயின் வீரர் ரஃபேல் நடாலின் தொடர்ச்சியான வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்து இண்டியன்வெல்ஸ் ஓபன் சாம்பியன் ஆகியுள்ளார் அமெரிக்க வீரர் டெய்லர் ஃபிரிட்ஸ்.
உலகத் தரவரிசையில் நான்காம் இடம், தொடர்ச்சியாக 20 போட்டிகளில் வெற்றி, 21 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் என பார்மின் உச்சத்தில் இருந்து வருகிறார் ஸ்பெயின் வீரர் ரபேல் நடால். இதனால், அமெரிக்காவின் இண்டியன்வெல்ஸில் நடந்து வரும் பி.என்.பி.பரிபாஸ் ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடரிலும் அவரே பட்டம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்டது. அதற்கேற்ப இறுதிப்போட்டிக்கும் தகுதிபெற்றிருந்தார். இறுதிப் போட்டியில் அவரை எதிர்த்து விளையாடியது 24 வயதான அமெரிக்க வீரர் டெய்லர் பிரிட்ஸ். உலகத் தரவரிசையில் 20-வது இடத்தில் உள்ள டெய்லரை நடால் எளிதாக வீழ்த்திவிடுவார் என்றே அனைவரின் எதிர்பார்ப்பாக இருந்தது.
அதற்கு மற்றொரு காரணம் டெய்லரின் காயம். சில நாட்களாக காயத்தால் அவதிப்பட்டு வரும் அவர், இந்தப் போட்டியில் விளையாடுவதே சந்தேகமாக இருந்தது. ஆனால், வலியை பொறுத்துக்கொண்டு விளையாடிய டெய்லர், அனைவரின் எதிர்பார்ப்பையும் தவிடுபொடியாக்கியுள்ளார்.
சில மணிநேரங்கள் முன்பு நடந்த இறுதிப்போட்டியில் தொடக்கம் முதலே ரஃபேல் நடாலுக்கு அதிர்ச்சி கொடுத்து வந்தார் டெய்லர். அதிரடியாக பாயின்ட்ஸ்களை பெற்றுவந்த அவர், 6-3 என்ற கணக்கில் நடாலை வீழ்த்தி முதல் செட்டை கைப்பற்றினார். இரண்டாவது செட்டிலும் டெய்லரின் வேகம் தொடர்ந்தது. அதேநேரம் நடாலும் சுதாரித்துகொண்டு அவருக்கு கடும் போட்டியை ஏற்படுத்தினார். இதனால் இரண்டாவது செட்டில் அனல் பறந்தது. எனினும் இறுதியில், 7-6 (7/5) என்ற கணக்கில் டெய்லரே இரண்டாவது செட்டையும் கைப்பற்றி சாம்பியன் பட்டத்தை பெற்றார்.
இதன்மூலம் தொடர்ச்சியாக 20 போட்டிகளில் வெற்றி பெற்ற நடாலின் சாதனைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் இந்த 24 வயது இளைஞர். காயத்தினால் ஏற்பட்ட கடும் வலிக்கு மத்தியிலும் டெய்லர் வெற்றிபெற்றுள்ளதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.