வங்கி வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை; நடப்பு ஆண்டில் ஜிடிபி வளர்ச்சி 9.5% – ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் கணிப்பு
நடப்பு நிதி ஆண்டில் நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 9.5 சதவீதம் இருக்கும் என்று ரிசர்வ் வங்கி கணித்துள்ளது.
வங்கியின் வட்டி விகிதம் 4 சதவீதமாகவும், ரெபோ விகிதம் 3.35 சதவீதமாகவும் எவ்வித மாற்றமும் இன்றி தொடரும் என்று ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளார்.
2020-ம் ஆண்டு மார்ச் மாதத்தி லிருந்து இதுவரை வட்டி விகிதத்தில் 115 புள்ளிகள் வரை ரிசர்வ் வங்கி குறைத்துள்ளது. கரோனா வைரஸ் பரவலால் ஏற்பட்ட ஊரடங்கு மற்றும் அதைத் தொடர்ந்த நடவடிக்கைகளால் ஏற்பட்ட நிதி நெருக்கடியைச் சமாளிக்க வட்டி குறைக்கப்பட்டது.
கரோனா பரவல் 2-வது அலைகாரணமாக ஏற்பட்ட பாதிப்பி லிருந்து பொருளாதார நடவடிக்கை கள் தற்போது படிப்படியாக மீண்டு வருகின்றன. பொருளாதாரத்தை மீட்க சிக்கலில் உள்ள தொழில் துறைக்கு முன்னுரிமை அளிக்கப் படுவதாக ஆர்பிஐ கவர்னர் சுட்டிக்காட்டினார்.
நுகர்வோர் பொருள் அடிப்படையிலான பண வீக்கம் கடந்த நிதிஆண்டில் (2020-21) 5.7 சதவீதமாக இருந்தது. இது வரும் நிதி ஆண்டின் (2022-23) முதல் காலாண்டில் 5.1 சதவீதமாகக் குறையும் என எதிர்பார்ப்பதாகவும், அவ்விதம் கட்டுகள் வைப்பதற்கான நடவடிக்கைகளை ஆர்பிஐ தொடர்ந்து மேற்கொள்ளும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
பொருளாதாரத்தை மீட்பதற்கு ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை மிகவும் முக்கியமானது. அத்தகைய நடவடிக்கைகளை ஆர்பிஐ தொடர்ந்து மேற்கொள்ளும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஜூன் மாதத்துடன் முடிந்த மாதத்தில் நுகர்வோர் பொருள் அடிப்படையிலான பணவீக்கம் 6.3 சதவீதமாக உள்ளது. உணவுப் பொருள்களின் விலை கணிசமாக உயர்ந்ததும் இதற்கு முக்கியக் காரணமாகும். குறிப்பாக சமையல் எண்ணெய், பருப்பு வகைகள், முட்டை, பால், காய்கறிகள் விலை கணிசமாக உயர்ந்ததும் பணவீக்க உயர்வுக்குக் காரணம் என ஆர்பிஐ வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் விலை மே, ஜூன் மாதங்களில் இரட்டை இலக்க அளவுக்கு உயர்ந்துள்ளது. சமையல் எரிவாயு சிலிண்டர், கெரசின்,விறகு உள்ளிட்டவற்றின் விலையும் கணிசமாக உயர்ந்து காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட் டுள்ளது.