லட்சத்தீவுக்கு சரக்கு பரிமாற்ற சேவை அனைத்தும் கேரளாவின் பேப்பூர் துறைமுகத்தில் இருந்து கர்நாடகா மாநிலம் மங்களூரு துறைமுகத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. சரக்குகளை லட்சத்தீவு மக்களுக்கு அளித்து வந்த பேப்பூர் துறைக அதிகாரிகள் மங்களூரு துறைமுகத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர்.
லட்சத்தீவுக்கு சரக்கு பரிமாற்ற சேவைக்காக ஆறு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்தியாவின் பூகோளம் மற்றும் கலாசார பன்முகத்தன்மையை எடுத்துரைக்கும் தனித்துவமான தீவுக்கூட்டம் தான் லட்சத் தீவு. மிகவும் மிருதுவான பவளத் தீவுக்கூட்டங்கள் உள்ள பகுதியாகும். கேரளாவின் மலபார் கடற்கரையில் இருந்து ஏறத்தாழ 130 கி.மீட்டர் தள்ளி அமைந்திருக்கின்றது. 32 சதுர கிலோமீட்டர்கள் பரப்பளவில் 36 தீவுகளைக் கொண்ட நிலப்பரப்பு தான் லட்சத்தீவு. இந்த 36 தீவுகளில் 10 தீவுகள் மனிதர்கள் வசிக்கிறார்கள். ஒரு தீவு சுற்றுலாப் பயணிகளுக்கான தீவாக இருக்கிறது.
யூனியன் பிரதேசமான லட்சத்தீவினை ஐஏஎஸ் அல்லது ஐபிஎஸ் அதிகாரிகளே நிர்வகித்து வந்தனர். ஆனால் இந்த நடைமுறைகளை மாற்றிய மத்திய அரசு, குஜராத்தைச் சேர்ந்த அரசியல்வாதியான பிரஃபுல் படேலை நிர்வாக அதிகாரியாக நியமித்தது.
பிரஃபுல் படேல் லட்சத்தீவில் கொண்டு வந்த பல்வேறு சீர்திருத்தங்கள் உள்ளூர் மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளன. மக்கள் அவருக்கு எதிராக போராட்டத்தில் குதித்துள்ளனர். லட்சத்தீவு பாஜக நிர்வாகிகளே பிரஃபுல் படேலின் நிர்வாக சீர்திருத்தங்களை கடுமையாக எதிர்க்கிறார்கள். மேலும் அவரை உடனடியாக அப்பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று கோரி வருகின்றனர்.
லட்சத்தீவு மக்கள் கடுமையாக எதிர்க்கும் அளவிற்கு பிரஃபுல் படேல் அப்படி என்ன சீர்திருத்தத்தை கொண்டு வந்தார். மதுவே இல்லாத லட்சத்தீவில் மதுவிற்பனைக்கு அனுமதி கொடுத்துள்ளார். மொத்த மக்கள் தொகையில் 95.6 சதவிகிதம் இஸ்லாமியர்களே வசிக்கும் அந்த தீவில் மாட்டு இறைச்சியைத் தடை செய்யப்பட்டுள்து. மதிய உணவாக அசைவ உணவு வழங்கப்பட்டு வந்தது. அது தற்போது நீக்கப்பட்டுள்ளது. கிராம ஊராட்சிகளில் 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றவர்கள் போட்டியிட முடியாது.
தடுப்புக் காவல் தொடர்பான சட்ட வரையறையையும் பிரஃபுல் படேல் அனுப்பி வைத்துள்ளார். இந்த சட்டவரைமுறை மத்திய உள்துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்டால், லட்சத்தீவில் வசிக்கும் எவரையும் ஓராண்டு காலத்துக்கு சமூக விரோதச் செயல்கள், கள்ளக்கடத்தல், சட்டவிரோத கடத்தல், சைபர் கிரைம், பாலியல் குற்றங்கள், சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் செயல்கள் போன்றவற்றில் ஈடுபட்டதாகக் கூறி சிறைப்படுத்த இயலும்.
இதுதவிர, லட்சத் தீவு பஞ்சாயத்து ஒழுங்கு முறையில் (Lakshadweep Panchayat Regulation) ஏற்கெனவே நடைமுறையில் உள்ள சட்டத்தில் சில மாறுதல்களைப் புகுத்தி உள்ளார். இச்சட்டத்தின் நோக்கம் என்னவென்றால், ரிசார்ட்கள் மற்றும், விடுதிகள் என மாலத்தீவுகள் எப்படி வளர்ச்சி பெற்றனவோ அது போல் லட்சத்தீவும் மாற வேண்டும் என்பது தானாம். இங்குள்ள எந்தக் கட்டடத்தையோ சொத்துகளையோ நிர்வாகியின் பெயரில் மாற்றுவதற்கு, தீவு மக்களை அவர்கள் வசிக்கும் இடங்களில் இருந்து வேறு இடத்துக்கு அமர்த்துவதற்கும் சட்டத்தில் அதிகாரம் கோரப்பட்டுள்ளது.
இவையெல்லாம் நகர் மேம்பாட்டுத்திட்டம் (Town planning) எனப்படும் வளர்ச்சி நடவடிக்கைகள் என வரைவு அறிக்கை கூறுகிறது. இதனால் இந்தத் தீவில் வாழும் மக்களின் சொத்துகளை நிர்வாகி வாங்கலாம், சொத்துகளை நிர்வாகத்தின் உரிமையாக வைத்துக் கொள்ளலாம் என்பதை இந்த ஒழுங்குமுறை தெரிவிக்கிறது.
இப்படி பிரஃபுல் படேல் உருவாக்கி உள்ள சீர்திருத்தங்களை லட்த்தீவு மக்கள் கடுமையாக எதிர்த்து வருகிறார்கள். இந்நிலையில், பிரஃபுல் படேல் திங்கள் கிழமை அன்று லட்சத்தீவு செல்ல இருப்பதாகவும், 20ம் தேதி வரை அங்கு தங்கி சீர்திருத்த நடவடிக்கைகளின் செயல்பாடுகளை மதிப்பீடு செய்ய உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதற்காக, லட்சத்தீவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கிறது.
இதற்கிடையே, லட்சத்தீவிற்கு கேரள மாநிலம் பேப்பூர் துறைமுகத்தில் இருந்து சரக்குகள் கொண்டு செல்வது நிறுத்தப்பட்டு, சரக்கு போக்குவரத்து முழுவதுமாக கர்நாடக மாநிலம் மங்களூருவுக்கு மாற்றப்பட்டுள்ளது. லட்சத்தீவுக்கு தேவையான சரக்குகளை பேப்பூர் வழியாக கொண்டு செல்லவும், மக்களுக்கு தேவையான உதவிகளை செய்யவும், கேரள அரசு தயாராக இருப்பதாக, அம்மாநில துறைமுக அமைச்சர் அகமது தேவர்கோவில் ஏற்கனவே கூறியிருந்தார். இந்நிலையில், மங்களூருவுக்கு சரக்கு போக்குவரத்து மாற்றப்பட்டிருப்பது கேரளாவுடனான லட்சத்தீவின் உறவுகளை துண்டிக்கும் செயலாகவே பார்க்கப்படுகிறது.