உலகம்

ரஷ்யாவுக்கு கட்டுப்பாடு விதித்தால் இந்தியாவுக்குத்தான் ஆபத்து… அமெரிக்காவை எச்சரிக்கும் ரஷ்ய விண்வெளி ஆய்வு நிறுவனம்

46views

சர்வதேச விண்வெளி நிலையம் இந்தியா மீது விழுவதற்கு வாய்ப்புள்ளதாக அமெரிக்காவை ரஷ்யா எச்சரித்துள்ளது. சர்வதேச நாடுகளின் எதிர்ப்பை மீறி உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது.

இதையொட்டி, அந்நாட்டின் மீது பொருளாதார தடை கள் மற்றும் கட்டுப்பாடுகளை விதிப்பதற்கு அமெரிக்கா முடிவு செய்துள்ளது. இந்நிலையில், அமெரிக்காவுக்கு ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பாக ரஷ்யாவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ராஸ் காஸ்மோஸின் தலைவர் டிமிட்ரி ரோகோசின் கூறியதாவது-

அமெரிக்கா எங்களுடன் ஒத்துழைக்க மறுத்துவிட்டால், சர்வதேச விண்வெளி நிலையத்தை யார் காப்பாற்றுவது? கட்டுப்பாடு இல்லாமல் சுற்றும் சர்வதேச விண்வெளி நிலையம் அமெரிக்கா அல்லது ஐரோப்பா மீது விழக் கூடும்.

இதையும் படிங்க – உக்ரைன் மீதான தாக்குதலுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்.. வீட்டோ அதிகாரத்தின் மூலம் தீர்மானத்தை முடக்கிய ரஷ்யா!!

500 டன் எடை கொண்ட விண்வெளி நிலையம், இந்தியா அல்லது சீனாவின் மீது விழுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. இதனை அமெரிக்கா விரும்புகிறதா? சர்வதேச விண்வெளி நிலையம் ரஷ்யாவுக்கு மேலே அமைக்கப்படவில்லை. இதற்கு மேல் ரிஸ்க் எடுக்க விரும்பினால் எடுத்துக் கொள்ளுங்கள்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

உக்ரைனுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக ராணுவம் மற்றும் விண்வெளித்துறையில் ரஷ்யாவுக்கு வழங்கி வரும் தொழில் நுட்ப உதவியை குறைத்துக் கொள்ள அமெரிக்கா முடிவு செய்துள்ளது.

உலக நாடுகளின் எதிர்ப்பு மற்றும் கண்டனங்களை மீறி உக்ரைனை ரஷ்யா துவம்சம் செய்து வருகிறது. ரஷ்ய படைகள் தொடர்ந்து உக்ரைன் தலைநகர் கீவ்வை கைப்பற்றும் நோக்கத்தோடு முன்னேறி வருகின்றன.

முன்னதாக ரஷ்யாவுக்கு எதிரான தீர்மானம் ஐநா பாதுகாப்பு அவையில் கொண்டு வரப்பட்டது. இதற்கு அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்த நிலையில் இந்தியா, சீனா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்பதை தவிர்த்துக் கொண்டன. இந்த தீர்மானத்தை ரஷ்யா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி முறியடித்தது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!