செய்திகள்விளையாட்டு

யூரோ கோப்பை: ஸ்பெயின், இத்தாலி அணிகள் அரையிறுதிக்கு தகுதி! பெல்ஜியம் அதிர்ச்சி தோல்வி !!

64views

உலக கால்பந்து ரசிகர்களின் பெரும் கொண்டாட்டமான யூரோ கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. அந்த வகையில் நேற்று இரவில் இரண்டு காலிறுதி போட்டிகள் நடைபெற்றன. ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்ட்கில் நேற்று நடந்த முதலாவது கால்இறுதி ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் ஸ்பெயின் அணி, சுவிட்சர்லாந்தை எதிர்கொண்டது.

போட்டியில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஸ்பெயின் அணிக்கு 8ஆவது நிமிடத்தில் கோல் வந்தது. கார்னரில் இருந்து வந்த பந்தை ஸ்பெயின் அணி வீரர் ஜார்டி ஆல்பா கோல் வலையை நோக்கி அடித்தார். அந்த பந்து சுவிட்சர்லாந்து நடுகள வீரர் டெனிஸ் ஜகாரியா காலில் பட்டு கோல் வலைக்குள் புகுந்து ஓன் கோலாக மாறியது.

அடுத்து முதல்பாதியில் இரு அணியினரும் கோல் அடிக்கவில்லை. பின்னர் இரண்டாம் பாதியில் போட்டியின் 68ஆவது நிமிடத்தில் சுவிட்சர்லாந்து அணி பதில் கோல் திருப்பியது. அந்த அணி கேப்டனும் நட்சத்திர வீரருமான ஹெர்டான் ஷாகிரி இந்த கோலை அடித்தார். இதனால் 1-1 என போட்டி ஏற்பட்டது. இதனிடையே 77ஆவது நிமிடத்தில் எதிரணி வீரரின் காலில் பலமாக மிதித்த சுவிட்சர்லாந்து வீரர் ரெமோ புருலெர் நடுவரால் சிவப்பு அட்டை காட்டி வெளியேற்றப்பட்டார். அதன் பிறகு அந்த அணி 10 வீரர்களுடன் களத்தில் விளையாடியது.

எனினும் சுவிட்சர்லாந்து அணி தீவிரமாக போராடியது. ஸ்பெயின் அணி பல முறை கோல் அடிக்க கடுமையாக முயற்சித்தப்போது சுவிட்சர்லாந்து வீரர்களை அதனை தடுத்தனர். பின்னர் போட்டி 90 நிமிடம் முடிவில் சமநிலை நீடித்ததால் கூடுதலாக 30 நிமிடம் ஒதுக்கப்பட்டது. அதிலும் முடிவு கிடைக்கவில்லை. இதனை அடுத்து வெற்றி, தோல்வியை நிர்ணயிக்க பெனால்டி ‘ஷூட்-அவுட்’ முறை கடைபிடிக்கப்பட்டது.

பரபரப்பான பெனால்டி ஷூட்-அவுட்டில் ஸ்பெயின் அணி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது. பின்னர் நள்ளிரவில் நடந்த நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் இத்தாலி மற்றும் பலம் வாய்ந்த பெல்ஜியம் அணிகள் மோதின.

இத்தொடரில் சாம்பியன் கோப்பையை கைப்பற்றும் என எதிர்பார்க்கப்பட்ட அணிகளில் ஒன்று பெல்ஜியம். இதனால்ல இப்போட்டி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. போட்டிய தொடங்கியதும் முதல் பாதியில் இத்தாலி அணி அடுத்தடுத்து 2 கோல்களை அடித்தது. இதனால் இரண்டாம் பாதி விறுவிறுப்பாக நடைபெற்றது. இதனையடுத்து பெல்ஜியம் சார்பில் 47ஆவது நிமிடத்தில் ஒரு கோல் அடிக்கப்பட்டது. அதன் பின் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை.

பெல்ஜியம் அணி வீரர்கள் கடுமையாக போராடி ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். எனினும் அவர்களால் கோல் அடிக்க முடியவில்லை. இறுதியில் இத்தாலி அணி 2-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!