யாஸ் புயல் அச்சுறுத்தலையொட்டி மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபட ராணுவத்தின் கிழக்கு கட்டுப்பாட்டு மண்டலம் தயார் நிலையில் உள்ளது.
கிழக்கு-மத்திய வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, வலுவடைந்து புயலாக மாறியது. இந்த புயலுக்கு யாஸ் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் நேற்று முன்தினம் இரவு மேலும் வலுப்பெற்று அதிதீவிர புயலாக மாறியுள்ளது.
ஒடிசா-மேற்கு வங்காள கடலோர பகுதியில் பாரதீப் மற்றும் சாகர் தீவுக்கு இடையே தம்ரா துறைமுகத்தின் வடக்கு மற்றும் பாலசோரின் தெற்கு பகுதியருகே இன்று நண்பகல் அதி தீவிர சூறாவளி புயலாக கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையாட்டி மேற்குவங்கம் மற்றும் ஒடிசா மாநிலங்களில் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேற்கு வங்க அரசு விடுத்த வேண்டுகோள் அடிப்படையில், மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கையில் மாநில அரசுடன் இணைந்து செயல்பட கிழக்கு மண்டலத்தில் உள்ள இந்திய ராணுவம் தயார் நிலையில் உள்ளது.
புயல் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ள தேவையான உபகரணங்கள், சிறப்பு வீரர்கள் அடங்கிய 17 குழுவினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் புருலியா, ஜர்கிராம், பிர்பும், பர்தாமன், மேற்கு மிட்னாபூர், ஹவுரா, ஹூக்ளி, நாடியா, 24 பரகனாஸ் வடக்கு மற்றும் தெற்கு ஆகிய பகுதிகளில் அனுப்பப்பட்டுள்ளனர்.
8 புயல் நிவாரண குழுக்கள், கொல்கத்தாவில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். புயல் பாதிப்பில் சிக்குபவர்களை மீட்டு மருத்துவ சிகிச்சை அளிக்கவும், சாய்ந்து விழும் மரங்களை வெட்டி அகற்றவும், இந்த குழுவினர் தயார் நிலையில் உள்ளனர். இவர்கள் உள்ளூர் நிர்வாகத்துடன் இணைந்து செயல்படுவர் என மத்திய பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.