இந்தியா

மேகதாது அணை விவகாரம் : கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை டெல்லி பயணம்

60views

மேகதாது அணை திட்டத்திற்கு உடனடியாக அனுமதி வழங்க கோரி மத்திய அமைச்சர்களை சந்தித்து பேச கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை இன்று டெல்லி செல்கிறார். தமிழகத்தின் எதிர்ப்பை மீறி கர்நாடக அரசு, மேகதாது என்ற இடத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே புதிய அணை கட்ட திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில், மேகதாது அணை திட்டம், நதி நீர் பங்கீட்டு பிரச்சினைகள் குறித்து சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை பெறவும், மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை நாளை (ஆகஸ்ட் 26) சந்தித்துப் பேச இருக்கிறார். இதற்காக பசவராஜ் பொம்மை இன்று டெல்லிக்குப் புறப்பட்டுச் செல்கிறார்.

இதுகுறித்து பசவராஜ் பொம்மை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ‘அண்டை மாநிலங்களுடனான நதிநீர் பங்கீடு குறித்து சட்ட நிபுணர்களுடன் கலந்து ஆலோசிக்க நான் டெல்லி செல்ல இருக்கிறேன்.

கர்நாடக அரசின் அட்வகேட் ஜெனரல், மூத்த வழக்கறிஞர்கள், சட்ட நிபுணர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொள்வார்கள். நதிநீர் பிரச்சினைகளில் கர்நாடக அரசின் அடுத்தக்கட்ட நிலைப்பாடு என்ன என்பது குறித்து அந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும்.

கர்நாடகா மாநிலத்தில் நிலம், நீர், மொழியை பாதுகாக்க அனைத்து முயற்சியும் மேற்கொள்வேன். இதில் யாருக்கும் எந்த விதமான ஆதங்கமும் படவேண்டாம். டெல்லி சென்று 26 ஆம் தேதி மத்திய அமைச்சர்களை சந்தித்துப் பேச இருக்கிறேன்.

இந்த சந்திப்பின்போது கர்நாடக மாநிலத்தின் வளர்ச்சி குறித்து விவாதிக்க இருக்கிறேன். மத்திய சுகாதாரம், நிதி, ஜல்சக்தி, விவசாயம் மற்றும் ராணுவ துறைகளின் அமைச்சர்களை சந்திக்க உள்ளேன்.’இவ்வாறு தெரிவித்தார் பசவராஜ் பொம்மை.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!