சர்ச்சைக்குரிய ‘தி ஃபேமிலி மேன்’ சீசன் 2 வெப் தொடரில் நடித்து பிரபலமடைந்ததன் மூலம் மற்றொரு வலை தொடரில் நடிக்க நடிகை சமந்தா திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
நாக சைத்தன்யாவை மணந்த பிறகு கதைக்கும் தன்னுடைய கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் கொண்ட படங்களில் நடிக்க அதிக ஆர்வம் காட்டி வருகிறார் சமந்தா. திருமணத்திற்கு பிறகு அவர் தேர்வு செய்யும் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல பாராட்டுதல்கள் கிடைத்து வருகின்றன.
சினிமாவில் முன்னணியில் இருக்கும் போதே தி ஃபேமிலி மேன் சீசன் 2 வலை தொடரில் சமந்தா நடிப்பதாக அறிவிப்பு வெளியானது. அதை தொடர்ந்து இப்புதிய சீசனுக்கான எதிர்பார்ப்பு தென்னிந்திய ரசிகர்களிடம் அதிகம் உருவாகின.
கடந்த வாரம் இந்த தொடர் அமேசான் பிரைமில் வெளியானது. அதை தொடர்ந்து சர்ச்சைகள் உருவாக ஆரம்பித்தன. தமிழர்கள் மற்றும் தமிழுணர்வுகளை தவறான வகையில் சித்தரித்துள்ளதாக பல்வேறு தரப்பில் எதிர்ப்பு குரல்கள் எழுந்தன.
எனினும் இந்த தொடருக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. மேலும், சமந்தாவின் நடிப்பு பலரிடமும் பாராட்டுக்களை பெற்றுள்ளன. இதனால் அவர் மீண்டும் ஒரு வலைதொடரில் நடிக்க முடிவு செய்துள்ளாராம். விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.