தமிழகம்

மின் கட்டணத்துக்கு ஜிஎஸ்டி வசூலிப்பதை முதல்வர் ரத்து செய்ய வேண்டும்: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

53views

மின் கட்டணங்களுக்கான ஜிஎஸ்டி வசூலிப்பை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: எதிர்க்கட்சித் தலைவராக ஸ்டாலின் இருந்தபோது, சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) குறித்து பல்வேறு விமர்சனங்களை தெரிவித்துவிட்டு, முதல்வரான பிறகு அதிமுக ஆட்சியில் ஜிஎஸ்டி வசூலிக்காதவற்றுக்கு எல்லாம் வரி வசூலிக்க உத்தரவிட்டு வருவதுதிமுகவின் இரட்டை நிலைப்பாட்டுக்கு உதாரணமாக உள்ளது.

மின் பயன்பாடு கட்டணம் தவிர பிற மின் கட்டணங்களுக்கு 18 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்படுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாடு மின் உற்பத்திமற்றும் பகிர்மானக் கழகத்தில் பதிவுக் கட்டணம், மின் இணைப்பு கட்டணம், மீட்டர் கட்டணம், வளர்ச்சிக் கட்டணம், ஆரம்ப மின் பயன்பாடு கட்டணம், மின்துண்டிப்பு கட்டணம் என பல வகையான கட்டணங்கள் வசூலிக்கப்பட்டு வருகிறது. எந்த கட்டணத்துக்கும் இதுவரை ஜிஎஸ்டி விதிக்கப்படவில்லை.

ஆனால், திமுக ஆட்சியில் 18 சதவீத ஜிஎஸ்டி வசூலிக்கப்படுவதாகவும், 2017 ஜூலை முதல் தேதி ஜிஎஸ்டி அமலுக்கு வந்ததில் இருந்து, இதுநாள் வரையான வரியை வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இதுகுறித்து நுகர்வோர் சந்தேகம் எழுப்பினால் தெளிவுபடுத்த மின்துறை பொறியாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் பத்திரிகையில் செய்தி வந்துள்ளது. இதைக் கேட்டு பொதுமக்கள் அச்சத்தில் உறைந்து போயுள்ளனர்.

‘மாதம் ஒருமுறை மின் கட்டணம் செலுத்தும் முறை அறிமுகப்படுத்தப்படும்’ என்று திமுக தேர்தல் அறிக்கையில் தலைப்புசெய்தியாக தெரிவிக்கப்பட்டிருந்தது. கைத்தறி நெசவாளர்களுக்கு 2 மாத இலவச மின்சாரம் 300 யூனிட்டாகவும், விசைத்தறி நெசவாளர்களுக்கு 1,000 யூனிட்டாகவும் உயர்த்த பரிசீலிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.

ஆனால், ஜிஎஸ்டி குழுமம்சொல்கிறது என காரணம் காட்டி, மக்கள் மீது கூடுதல் சுமையைதிணிப்பது ஏற்கத்தக்கதல்ல.

திமுகவின் இந்த அறிவிப்புக்கு அதிமுக சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

முதல்வர் இந்த பிரச்சினையில் உடனடியாக தலையிட்டு, மின் கட்டணங்களுக்கான ஜிஎஸ்டி வசூலிப்பை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதுடன், நிரந்தரமாக ரத்து செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!