அமெரிக்காவில் நடைபெறும் மயாமி ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவு பைனலில் ஜப்பான் நட்சத்திரம் நவோமி ஒசாகா – போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக் மோதுகின்றனர்.அரையிறுதியில் சுவிட்சர்லாந்து வீராங்கனை பெலிண்டா பென்சிக்குடன் (28வது ரேங்க்) மோதிய ஒசாகா (77வது ரேங்க்) 4-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் பென்சிக்கை முதல்முறையாக வீழ்த்தி பைபலுக்கு முன்னேறினார். விறுவிறுப்பான இப்போட்டி 2 மணி, 6 நிமிடங்களுக்கு நீடித்தது. இதற்கு முன்பு ஒசாகாவுடன் மோதிய 3 முறையும் பென்சிக்தான் வென்று இருந்தார்.மற்றொரு அரையிறுதியில் அமெரிக்க வீராங்கனை ஜெசிகா பெகுலாவுடன் (21வது ரேங்க்) மோதிய ஸ்வியாடெக் (2வது ரேங்க்) 6-2, 7-5 என்ற நேர் செட்களில் வென்றார். இப்போட்டி 1 மணி, 48 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது. இன்று நடைபெறும் பைனலில் ஒசாகா – ஸ்வியாடெக் மோதுகின்றனர். 2019 கனடா மாஸ்டர்ஸ் தொடரில் ஸ்வியாடெக்குடன் மோதிய ஒசாகா நேர் செட்களில் வென்றது குறிப்பிடத்தக்கது.
நம்பர் 1 வீராங்கனையாக இருந்த ஒசாகா, பல தொடர்களில் பங்கேற்காததால் தற்போது 77வது இடத்துக்கு பின்தங்கியுள்ள நிலையில், தொடர்ச்சியாக வெற்றிகளைக் குவித்து வரும் ஸ்வியாடெக், நாளை மறுநாள் வெளியாக உள்ள தரவரிசையில் முதலிடத்துக்கு முன்னேற உள்ளார்.மெத்வதேவ் ஏமாற்றம்: மயாமி ஓபன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் போலந்து வீரர் ஹூபர்ட் ஹர்காக்சுடன் (10வது ரேங்க்) மோதிய மெத்வதேவ் 6-7 (5-7), 3-6 என்ற நேர் செட்களில் 2 மணி, 3 நிமிடம் போராடி தோற்றார். இதனால் மெத்வதேவ் தரவரிசையில் மீண்டும் முதல் இடம் பிடிக்கும் வாய்ப்பு கேள்விக் குறியாகி உள்ளது.மற்றொரு காலிறுதியில் ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்கராஸ் (16வது ரேங்க்) 7-5, 6-3 என நேர் செட்களில் கிரீஸ் வீரர் ஸ்டெபனோஸ் சிட்சிபாசை (5வது ரேங்க்) 2வது முறையாக வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.