செய்திகள்விளையாட்டு

மனச்சோர்வால் விலகுகிறேன்…ஒசாகா அதிரடி அறிவிப்பு

67views

ஜப்பான் டென்னிஸ் நட்சத்திரம் நவோமி ஒசாகா (23 வயது, 2வது ரேங்க்), மனச்சோர்வு காரணமாக பிரெஞ்ச் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்து அதிர்ச்சி அலைகளை எழுப்பியுள்ளார். நடப்பு தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் ருமேனியாவின் பேட்ரிசியா மரியாவை வீழ்த்திய ஒசாகா, போட்டிக்கு பின்னர் நடக்கும் சம்பிரதாயமான செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்காமல் புறக்கணித்தார். மனச்சோர்வு காரணமாக மீடியாவை சந்திக்க விரும்பவில்லை என்ற அவரது கருத்துக்கு முன்னணி வீரர், வீராங்கனைகள் பலர் ஆதரவு தெரிவித்தனர்.

எனினும், விதிமுறைகளை மீறி நடந்துகொள்ளும் ஒசாகா, அபராதம் மற்றும் கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் கலந்து கொள்ள தடை உள்பட கடுமையான நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என பிரெஞ்ச் ஓபன் நிர்வாகம் அவரை எச்சரித்தது. விம்பிள்டன், யுஎஸ் ஓபன், ஆஸி. ஓபன் நிர்வாகங்களும் இதில் கை கோர்த்துக் கொண்டு ஒசாகாவை மிரட்டும் தொனியில் கூட்டறிக்கை விடுத்தன. மேலும், அவருக்கு ₹11 லட்சம் அபராதம் விதிக்கப்படுவதாக பிரெஞ்ச் ஓபன் நிர்வாகம் அறிவித்தது.

இந்த நிலையில், ‘மனச்சோர்வு காரணமாக பிரெஞ்ச் ஓபனில் இருந்து விலகுகிறேன். மற்ற வீரர், வீராங்கனைகளின் கவனம் சிதறும் வகையில் நடந்துகொள்ள விரும்பவில்லை. 2018 யுஎஸ் ஓபனில் இருந்தே மன அழுத்தம் காரணமாக அவதிப்பட்டு வருகிறேன். மீடியாவை சந்திப்பது எனக்கு பதற்றத்தை ஏற்படுத்துகிறது. தற்போதைக்கு டென்னிஸ் களத்தில் இருந்து சிறிது காலம் விலகியிருக்க முடிவு செய்துள்ளேன். பிறகு பார்க்கலாம்’ என்று ஒசாகா ட்வீட் செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மார்டினா நவ்ரத்திலோவா, செரீனா வில்லியம்ஸ் உள்ளிட்ட டென்னிஸ் பிரபலங்கள் பலரும் ஒசாகாவுக்கு ஆதரவு தெரிவித்து வருவதுடன், விதிமுறைகளில் மாற்றம் செய்வதற்கான தருணம் இது என வலியுறுத்தி உள்ளனர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!