மத்திய விஸ்டா திட்டத்தை நிறுத்த உத்தரவிடக் கோரும் வழக்கு: டெல்லி உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு
டெல்லியில் கட்டப்பட்டு வரும் புதிய நாடாளுமன்றம் உள்ளடங்கிய மத்திய விஸ்டா திட்டத்தை நிறுத்தக் கோரி தாக்கல் செய்த மனு மீது டெல்லி உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது.
இந்த வழக்கில் மனுதாரர், அரசு தரப்பில் வாதங்கள் மு டிந்தநிலையில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்த நிலையில் டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி திருபாய் நிரன்பாய் படேல் தலைமையிலான அமர்வு இன்று தீர்ப்பு அளிக்க உள்ளனர்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பிரதமர் மோடியால் மத்திய விஸ்டா திட்டம் டெல்லியில் 86 ஏக்கரில் தொடங்கப்பட்டது. புதிய நாடாளுமன்றம், ராஜபாதை, மத்திய அரசு அலுவலகங்கள், பிரதமர் அலுவலகம், இல்லம், சிறப்புபாதுகாப்புப்படை அலுவலகம், குடியரசுத் துணைத்தலைவர் இல்லம் உள்ளிட்ட பல கட்டிடங்கள் இதில் அடங்கியுள்ளன.
டெல்லியில் கரோனா வைரஸ் 2-வது அலை உச்சக் கட்டத்தை எட்டியபோது, டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் டெல்லியில் அனைத்து கட்டுமானப்பணிகளையும் நிறுத்த உத்தரவிட்டது. அதை மேற்கோள்காட்டி மத்திய விஸ்டா திட்டத்தை நிறுத்தவும் உத்தரவிடக் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொதுநலன் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு மீதான விசாரணையில் மத்திய அ ரசின் தரப்பில் ஆஜராகிய சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, வாதிடுகையில், ‘ இந்த மனு மத்திய விஸ்டா திட்டத்தை மட்டும நிறுத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பொதுநலன் நோக்கம் என்று குறுகிய கண்ணோட்டத்தில் இந்த மனு தாக்கலாகியுள்ளது. மனுதாரர் மற்ற கட்டிடங்களைப் பற்றியும் அங்கு பணியாற்றுவோர் குறித்தும் கவலைப்படவில்லை. இந்த மனு வழக்கத்துக்கு மாறானது, பொதுநலன் நோக்கத்துக்கு அப்பாற்பட்டது’ எனத் தெரிவித்திருந்தார்.
மனுதாரர் சார்பில் ஆஜராகிய வழக்கறிஞர் சித்தார்த் லூத்ரா வாதிடுகையில், ‘ டெல்லி பேரிடர் மேம்பாட்டு ஆணையத்தின் உத்தரவை மத்திய விஸ்டா திட்டத்துக்கு மட்டும் எடுக்கக்கூடாது. நவம்பர் 30ம் தேதிக்குள் பணிகளை முடிக்க வேண்டும் என விரைவுப்படுத்தினால் அரசியலமைப்புச்சட்டம் 19,21 பிரிவுகளைத் தூக்கி எறிந்துவிடுங்கள்’ எனத் தெரிவித்தார்.
இதற்கிடையே நாட்டில் கரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வரும் நிலையி மத்திய விஸ்டா திட்டத்தை நிறுத்தக் கோரி அனயா மல்ஹோத்ரா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் கடந்த 7ம் தேதி மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை பரிசீலிக்க டெல்லி உயர் நீதிமன்றத்தை உச்ச நீதிமன்றம் கேட்டுக்கொண்டது. இந்த மனுதொடர்பாகவும் இன்று டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவுகள் பிறப்பிக்கலாம்.