தமிழகம்

மத்திய அரசு ரூ.16 ஆயிரம் கோடி ஜிஎஸ்டி நிலுவை என்று உண்மைக்கு மாறாக தமிழக அரசு கூறியது ஏன்? – அண்ணாமலை கேள்வி

54views

மத்திய அரசு ரூ.6,500 கோடி ஜிஎஸ்டி நிலுவை தொகையை முழுமையாக கொடுத்ததை கூறாமல் ரூ.16 ஆயிரம் கோடி நிலுவை என உண்மைக்கு மாறாக தமிழக அரசு உயர்த்தி கூறி வந்தது ஏன்என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழக பட்ஜெட்டை கண்டித்து பாஜக சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை ஏற்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசியதாவது:

தமிழக பட்ஜெட்டில் பள்ளிக்கல்வி துறைக்கு ரூ.36 ஆயிரம் கோடி ஒதுக்கியுள்ளனர். அதில் 84 சதவீதம் ஆசிரியர்களுக்கு சம்பளமாக செல்கிறது. எஞ்சியுள்ள 16 சதவீதத்தில் சீருடை, புத்தகம் உள்ளிட்டவற்றுக்கு பணம் கொடுக்கப்படுகிறது. இவை தவிர, அரசுப்பள்ளிகளின் தரத்தை உயர்த்துவதற்கு இந்த பட்ஜெட்டில் எதுவும் இல்லை.

‘இல்லம் தேடி கல்வி’ திட்டத்துக்கான தொகையை மத்திய அரசுதான் கொடுக்கிறது. மத்திய அரசின்திறன் மேம்பாட்டு திட்டம் மூலம்தமிழகத்தில் மட்டும் கடந்த 7 ஆண்டுகளில் 1 லட்சத்து 37 ஆயிரத்து 717 பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் ஒரு இளைஞருக்கு ரூ.1,000 தான் வழங்கப்பட உள்ளது.

தாலிக்கு தங்கம் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு பயனாளியும் ரூ.65 ஆயிரம் முதல் ரூ.90 ஆயிரம் வரை பயன் பெற்று வந்தனர். அதை உயர்கல்வி உறுதி திட்டமாக மாற்றிவிட்டனர். இத்திட்டத்தின்படி, உயர்கல்வி செல்லும் அரசுப் பள்ளி மாணவிகளுக்கு மாதம்தோறும் ரூ.1,000 வழங்கினால் ஒரு பயனாளிக்கு 3 ஆண்டுகளுக்கும் வெறும் ரூ.36 ஆயிரம் மட்டுமே அரசு வழங்கும். யாரை ஏமாற்றுவதற்கு இந்த திட்டத்தை செயல்படுத்துகின்றனர். மாணவிகளுக்கு மட்டுமின்றி அரசுப்பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கும் மாதம்தோறும் ரூ.1,000 வழங்க வேண்டும்.

சென்னை மதுரவாயல் இரட்டைஅடுக்கு பாலத்தை திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது எதிர்த்தது. ஆனால், அதே திட்டத்துக்கு தற்போது ரூ.5,700 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

‘நாங்கள் கடன் வாங்குவதை குறைத்துவிட்டோம்’ என்று கூறுகின்றனர். ஆனால், நடப்பு ஆண்டு முடியும்போது தமிழகத்துக்கு ரூ.6.53 லட்சம் கோடி கடன் இருக்கும். 2020-21 ஆண்டில் நாட்டிலேயே அதிகமாக கடன் வாங்கிய மாநிலம் தமிழகம் என்று சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் ஏன் கூறவில்லை.

ஜிஎஸ்டி நிலுவை தொகையாக மத்திய அரசு ரூ.16 ஆயிரம் கோடி கொடுக்க வேண்டும் என்று நிதி அமைச்சர் கூறியிருந்தார். தமிழக அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில் மத்திய அரசு கொடுக்க வேண்டிய அனைத்து ஜிஎஸ்டி நிலுவை தொகையும் முழுமையாக கொடுத்துவிட்டார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

மத்திய அரசு தரவேண்டிய ரூ.6,500 கோடியை முழுமையாக கொடுத்துவிட்டதை கூறாமல், ரூ.16 ஆயிரம் கோடி நிலுவை என உண்மைக்கு மாறாக தொகையை உயர்த்தி கூறி வந்துள்ளனர்.

மத்திய அரசு கொண்டு வரும் அனைத்து திட்டங்களையும் மத்தியஅரசுடன் இணைந்து முழுமையாக 100 சதவீதம் செயல்படுத்தினால் பட்ஜெட்டே தேவையில்லாத மாநிலமாக தமிழகம் மாறிவிடும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், பாஜக துணைத் தலைவர் வி.பி.துரைசாமி, மாநில பொதுச் செயலாளர் கரு.நாகராஜன், செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி, கராத்தே தியாகராஜன் உள்ளிட்ட பலர்கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் தமிழக அரசை கண்டித்து பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!