மத்தியப் பிரதேசத்தில் இரவு 11 முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அம்மாநில முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.
ஒமைக்ரான் வைரஸ் பரவல் நாட்டில் அதிகரித்துவரும் சூழலில் ம.பி. முதல்வர் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். மத்தியப் பிரதேசத்தில் இதுவரை ஒமைக்ரான் தொற்று கண்டறியப்படவில்லை. இருப்பினும் சவுகான் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தியுள்ளார்.
முன்னதாக, மத்திய சுகாதாரத் துறைச் செயலர் ஒமைக்ரான் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்களுக்கு கடிதம் எழுதியிருந்தார். அதில் வார் ரூம்களை ஏற்படுத்துமாறும், மருத்துவ உட்கட்டமைப்பு வசதிகளைப் பலப்படுத்துமாறும் அறிவுறுத்தியிருந்தார்.
மேலும், மாவட்ட அளவில் கரோனா புள்ளி விவரங்களை துல்லியமாக சேகரிக்குமாறும், கண்காணிப்பு, பரிசோதனை, கட்டுப்பாட்டுப் பகுதிகளில் கவனம் செலுத்துமாறும், தேவைப்பட்டால் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்துமாறும் அறிவித்தியிருந்தார்.
பல்வேறு மாநிலங்களும் தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளது. டெல்லியில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்கள், கலாச்சார நிகழ்வுகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஹரியாணா மாநிலத்தில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் வங்கி, வணிக வளாகம், அரசு அலுவலகங்கள் எனப் பொது இடங்களுக்கு வர தடை விதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது அந்த வரிசையில் மத்தியப் பிரதேசமும் இணைந்துள்ளது. மத்தியப் பிரதேசத்தில் இரவு 11 முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அம்மாநில முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.