மணிப்பூர் மாநில முதல்வராக மீண்டும் என் பிரேன் சிங் திங்கள்கிழமை பதவியேற்றுக் கொண்டார்.
மணிப்பூர் உள்பட உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட், கோவா, பஞ்சாப் ஆகிய 5 மாநிலங்களுக்கு மார்ச் 10ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.
இதில் மணிப்பூர் மாநிலத்தில் பாஜக பெரும்பான்மை வாக்குகளுடன் வெற்றியடைந்தது.
இதனைத்தொடர்ந்து முதல்வரைத் தேர்வு செய்வது தொடர்பாக மணிப்பூர் தலைநகர் இம்பாலில் பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நேற்று (மார்ச் 20) நடைபெற்றது. பாஜக மேலிடப் பொறுப்பாளர்களாக நிர்மலா சீதாராமன், கிரண் ரிஜிஜு உள்ளிட்ட பலர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தின் முடிவில் பிரேன் சிங் மீண்டும் முதல்வராக தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில், இம்பாலில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று மாலை நடைபெற்ற விழாவில் பிரேன் சிங்கிற்கு மணிப்பூர் ஆளுநர் இல. கணேசன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இவருடன் அமைச்சர்களாக 5 பேர் பதவியேற்றுக் கொண்டனர்.
இதன்மூலம், தொடர்ந்து இரண்டாவது முறையாக மணிப்பூர் மாநிலத்தின் முதல்வரானார் பிரேன் சிங்.