ஒலிம்பிக் போட்டியின் மகளிர் பேட்மின்டன் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கும் பி.வி.சிந்து, முன்னணி வீராங்கனை அகானே யாமகுச்சியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். பரபரப்பான காலிறுதியில் உள்ளூர் வீராங்கனை யாமகுச்சியுடன் (4வது ரேங்க்) நேற்று மோதிய சிந்து, முதல் செட்டில் அதிரடியாக விளையாடி ஆதிக்கம் செலுத்தினார். அந்த செட்டை 21-13 என்ற புள்ளிக் கணக்கில் எளிதில் வசப்படுத்திய அவர் முன்னிலை பெற்றார். இந்த செட் 23 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது. 2வது செட்டில் நிலைமை தலை கீழானது. ஆரம்பத்தில் 12-6 என்ற புள்ளிக் கணக்கில் சிந்து முன்னிலையில் இருந்தார்.
அதனால் மிக எளிதாக வெற்றியை வசப்படுத்துவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடும் நெருக்கடி கொடுத்த யாமகுச்சி தொடர்ச்சியாக புள்ளிகளைக் குவிக்க 16-16 என்ற சமநிலைக்கு வந்தது. ஒரு கட்டத்தில் 18-20 என சிந்துவுக்கு பின்னடைவு ஏற்பட, யாமகுச்சி அந்த செட்டை கைப்பற்றும் நிலை ஏற்பட்டது. எல்லோர் மனநிலையும் 3வது செட்டுக்கு தயாரானாலும், உறுதியுடன் போராடிய சிந்து அடுத்தடுத்து புள்ளிகளை குவித்து 22-20 என்ற புள்ளி கணக்கில் 2வது செட்டையும் கைப்பற்றி அசத்தினார்.
நேர் செட்களில் வெற்றியை வசப்படுத்திய சிந்து, தொடர்ச்சியாக 2வது ஒலிம்பிக்சிலும் அரையிறுதிக்கு முன்னேறினார். விறுவிறுப்பான இப்போட்டி 56 நிமிடங்களுக்கு நீடித்தது. பேட்மின்டனில் இந்தியாவின் பதக்க வாய்ப்பை அதிகரித்துள்ள சிந்து, இன்று நடைபெறும் அரையிறுதியில் சீன தைபே வீராங்கனை சூ யிங் டாய் (2வது ரேங்க்) உடன் மோதுகிறார்.