விளையாட்டு

மகளிர் உலக கோப்பை கிரிக்கெட்: நியூசிலாந்தை வீழ்த்தியது தென்ஆப்பிரிக்கா அணி !

60views

மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் 16-வது லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து நிர்ணயித்த 229 ரன் வெற்றி இலக்கை 49.3 ஓவரில் அடைந்து தோல்வியடையாத அணியாக வளம் வருகிறது தென்ஆப்பிரிக்கா.

12-வது மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. 8 அணிகள் பங்கேற்றுள்ள மகளிர் உலக கோப்பை போட்டியில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் ரவுண்டு ராபின் முறையில் ஒருமுறை மோத வேண்டும். லீக் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதிபெறும்.

15 ஆட்டங்கள் முடிந்தன. ஆஸ்திரேலியா 4 ஆட்டத்தில் வெற்றிபெற்று 8 புள்ளிகளுடன் முன்னிலையில் உள்ளது. தென்ஆப்பிரிக்கா 6 புள்ளியும், இந்தியா, நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் தலா 4 புள்ளியும், இங்கிலாந்து, வங்காளதேசம் தலா 2 புள்ளியும் பெற்றுள்ளன. பாகிஸ்தான் தான் மோதிய 4 ஆட்டத்திலும் தோற்று புள்ளி எதுவும் பெறவில்லை.

இந்த நிலையில் 16-வது லீக் ஆட்டம் ஹேமில்டனில் நேற்று நடந்தது. இதில் நியூசிலாந்து- தென்ஆப்பிரிக்க அணிகள் மோதின. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. ஒருமுனையில் நியூசிலாந்து அணியின் விக்கெட்டுகள் விழுந்தாலும் மறுமுனையில் இருந்து ஷோபி டெவின் தொடர்ந்து சிறப்பாக ஆடினார். சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட அவர் 93 ரன்னில் ஆட்டம் இழந்தார். 101 பந்தில் 12 பவுண்டரி ஒரு சிக்சருடன் அவர் இந்த ரன்னை எடுத்தார். ஷோபி டெவின் ஆட்டம் இழந்தபோது நியூசிலாந்து அணியின் ஸ்கோர் 5 விக்கெட் இழப்புக்கு 198 ரன்னாக இருந்தது.

அதன்பின் தென்ஆப்பிரிக்க வீராங்கனைகளின் பந்துவீச்சு நேர்த்தியாக இருந்தது. இதனால் நியூசிலாந்து விக்கெட்டுகள் சரிந்தன. அந்த அணி 47.5 ஓவர்களில் 228 ரன்னில் ஆல் அவுட் ஆனது. தென்ஆப்பிரிக்க தரப்பில் ‌ஷப்னிம் இஸ்மாயில், அயபோங்கா கஹா ஆகியோர் தலா 3 விக்கெட் கைப்பற்றினார்கள். பின்னர், 229 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்ஆப்பிரிக்க அணி  பேட்டிங் செய்தது.

தொடக்க வீராங்கனை லிசில் லீ 17 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த தஸ்மின் பிரிட்ஸ் 18 ரன்னில் வெளியேறினார். 3-வது விக்கெட்டுக்கு லாரா வால்வார்த் உடன் கேப்டன் சுனே லுயுஸ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. லாரா 94 பந்தில் 67 ரன்கள் எடுத்தும், சுனே லுயுஸ் 73 பந்தில் 51 ரன்கள் எடுத்தும் ஆட்டமிழந்தனர். இருவரின் சிறப்பான ஆட்டத்தால் தென்ஆப்பிரிக்கா 49.3 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 229 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இதுவரை விளையாடியுள்ள நான்கு போட்டிகளிலும் தென்ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற்றுள்ளது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!