தமிழகம்

பொங்கல் பரிசுத் தொகுப்பில் கலப்படம் மக்களின் கோபத்தில் இருந்து தப்பிக்கவே மத்திய அரசுடன் மோதல் போக்கு: தமிழக அரசு மீது பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சனம்

102views

பொங்கல் பரிசுப் பொருட்களில் கலப்படத்தால் கோபத்தில் இருக்கும் மக்களிடம் இருந்து தப்பவே, குடியரசு தினவிழா ஊர்வலத்தை தமிழக அரசு கையில் எடுத்துள்ளது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழக மக்களும், ஊடகங்களும் பொங்கல் பரிசுத் தொகுப்பில் கலப்படம் இருப்பதை வெளிச்சப்படுத்தி போராடி வருகின்றனர். தங்களின் வழக்கமான நடைமுறையான மத்திய அரசுடன் மோதலை உருவாக்கி, மக்களின் கோபத்தில் இருந்து தப்பிக்க திமுக அரசு எடுத்திருக்கும் இந்த முயற்சி பலன் அளிக்கப் போவதில்லை. டெல்லியில் நடக்கும் குடியரசு தின அணிவகுப்பில் பங்கு பெற தமிழக அரசு வாகனம் தகுதி அடிப்படையில் தேர்வு பெறாத செய்தியை தவறாக சித்தரிப்பதை கண்டிக்கிறேன்.

திமுக ஆட்சியில் வடிகட்டியவரலாற்றைதானே வகுப்பறையில் கொடுத்துள்ளீர்கள். தமிழைதெய்வமாக நாங்கள் வணங்குவதுபோல் நீங்கள் வணங்க விரும்பவில்லை. தமிழில் இருந்து தோன்றிய உயர் சிறப்புமிக்க பிற தென்னிந்திய மொழிகளையும் ஒதுக்கினீர்கள்.

எடிட் செய்யப்பட்ட வரலாறுகளை தவிர்த்து, பள்ளி பாடப் புத்தகங்களில் உண்மை வரலாறை எழுத வைத்து, இந்த மாமனிதர்களின் வாழ்க்கையை சிறார்கள் படிக்கத் தந்தால் மகிழ்ச்சியாக இருக்கும். மேலும், வரும் 26-ம் தேதி நம் நாட்டின் குடியரசு தினமே தவிர சுதந்திர தினம் அல்ல. இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

பாஜக மாநில செய்தி தொடர்பாளர் தி.நாராயணன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: பொங்கல் தொகுப்பு என்ற பெயரில் பெரிய ஊழல், முறைகேடு நடைபெற்றுள்ளது. பல இடங்களில் தொகுப்பில் உள்ள பொருட்களில் கலப்படம் மிகுந்து காணப்படுகிறது.

நம் மாநிலத்தில் அதிகம்கிடைக்கக்கூடிய பல பொருட்களை வெளி மாநிலங்களில் வாங்கியது ஏன்? இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள்? பொருட்களில் கலப்படம் செய்ததற்கு யார் காரணம்? இவ்வளவு புகார் எழுந்தும் முதல்வர் நடவடிக்கை எடுக்காதது ஏன்? தொடர்புடையவர்கள் தண்டிக்கப்படுவார்களா? என்று மக்கள் பல்வேறு கேள்விகளை எழுப்புகின்றனர்.

ஏழை மக்களின் உணவுப் பொருட்களில் ஊழல் செய்ததை மறைக்கத்தான் கடந்த 2 நாட்களாக திமுக மற்றும் கூட்டணிக் கட்சியினர் குடியரசு தின விழா ஊர்தி விவகாரத்தைப் பெரிதாக்க முயல்வதாக மக்கள் பேசிக்கொள்கின்றனர்.

இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!