பெங்களூரு அணியின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்து, புள்ளிப்பட்டியலிலும் முதலிடத்தை பிடித்த சென்னை அணி
ஐபிஎல் தொடர் லீக் போட்டியில் பெங்களூரு அணியை பந்தாடிய சென்னை அணி, புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது.
ஐபிஎல் தொடரின் 19வது லீக் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. கேப்டன் கோலி தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், “கேப்டன் கூல்” தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதியதால், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.
டாஸ் வென்ற சென்னை அணி, பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய டூ பிளெஸ்சிஸ், ருத்துராஜ் கெய்க்வாட் ஆரம்பம் முதலே சிக்சரும், பவுண்டரிகளுமாக பறக்கவிட்டு அதிரடி காட்டினர்.
10வது ஓவரின் முதல் பந்தில், 33 ரன்கள் எடுத்த நிலையில் கெய்க்வாட் ஆட்டமிழந்தார். சிறப்பாக ஆடிய டூ பிளெஸ்சிஸ் அரைசதம் அடித்து ஆட்டமிழந்தார்.
24 ரன்கள் சேர்த்த நிலையில், சுரேஷ் ரெய்னாவும் ஆட்டமிழக்க சென்னை அணியின் ரன் ரேட், ஒருகட்டத்தில் குறைய தொடங்கியது. மறுமுனையில் நிதானமாக ஆடிய ஜடேஜா, கடைசி ஓவரில் விஸ்வரூபம் எடுத்தார்.
20வது ஓவரில் சிக்சர் மழை பொழியவிட்டு, அணியின் ஸ்கோரை 191ஆக உயர்த்தினார். 28 பந்துகளை எதிர்கொண்ட ஜடேஜா 62 ரன்களை குவித்து இறுதிவரை களத்தில் நின்றார்.
192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு அணி,
முதல் 3 ஓவர்களில் 44 ரன்களை குவித்து சென்னை ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தது. நான்காவது ஓவரின் முதல் பந்திலேயே கேப்டன் கோலி ஆட்டமிழக்க, அடுத்தடுத்து விக்கெட்டுகள் மளமளவென சரிந்தன.
வாஷிங்டன் சுந்தர், மேக்ஸ்வெல், டி வில்லியர்ஸ் ஆகிய 3 முக்கிய விக்கெட்டுகளையும் சாய்த்து, ஜடேஜா பந்துவீச்சிலும் விஸ்வரூபம் எடுத்தார்.
20 ஓவர் முடிவில் பெங்களூரு அணி 9 விக்கெட்டுகளை இழந்து 122 ரன்களை மட்டுமே சேர்த்து தோல்வியைத் தழுவியது.
அதிகபட்சமாக, பெங்களூரு வீரர் படிக்கல் 34 ரன்களை சேர்த்தார்.
ஜடேஜா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
இதன்மூலம் பெங்களூரு அணியின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்த சென்னை அணி, புள்ளிப்பட்டியலிலும் முதலிடத்தை பிடித்தது.