5-ஆவது கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட பீகார் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவருமான லாலு பிரசாத் யாதவுக்கு 5 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.60 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
பிகாா் மாநிலத்தின் பல்வேறு மாவட்ட கருவூலங்களிலிருந்து கால்நடைத் தீவனத்தைக் கொள்முதல் செய்வதற்காக சுமாா் ரூ.950 கோடி ஊழல் நடந்தது வெளிச்சத்திற்கு வந்தது. இந்த நிலையில், 5-ஆவது கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் லாலு பிரசாத் உள்பட 75 பேர் குற்றவாளிகள் என்று சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அறிவித்திருந்தது. குற்றம்சாட்டப்பட்ட 99 பேரில் 24 பேர் விடுவிக்கப்பட்டனர். 46 குற்றவாளிகளுக்கு தலா மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், பிஹாரின் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் தொரந்தா கருவூலத்திலிருந்து ரூ.140 கோடியை எடுத்து மோசடி செய்ததாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த ராஞ்சி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் லாலு தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, 5-ஆவது கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவருமான லாலு பிரசாத் யாதவுக்கு ஏற்கனவே 4 வழக்குகளில் மொத்தம் 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது, ஐந்தாவது மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் 5 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.60 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.