பிராமணர்கள் குறித்து சர்ச்சை கருத்து- சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகலின் 86 வயது தந்தை மீது எப்ஐஆர் பதிவு
பிராமணர்கள் குறித்து சர்ச்சை கருத்து வெளியிட்ட, சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகலின் தந்தை மீது போலீஸார் எப்ஐஆர் பதிவு செய்துள்ளனர். அதற்கு, ”சட்டம் அனைவருக்கும் மேலானது” என்று முதல்வர் பாகல் கூறியுள்ளார்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் உள்ளது. முதல்வராக பூபேஷ் பாகல் பதவி வகிக்கிறார். இவரது தந்தை 86 வயதான நந்தகுமார் பாகல், சமீபத்தில் உத்தர பிரதேச மாநிலம் சென்றிருந்தார்.
அங்கு நடந்த கிராம மக்கள் கூட்டத்தில் அவர் பேசும்போது, ”இந்தியாவில் உள்ள அனைத்து கிராம மக்களிடமும் நான் ஒன்றை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன். பிராமணர்களை உங்கள் கிராமத்துக்குள் அனுமதிக் காதீர்கள். மற்ற சமூகத்தினரிடமும் இதுகுறித்து பேசுவேன். எனவே, நாம் அனைவரும் பிராமணர்களை புறக்கணிக்க வேண்டும். அவர்களை மீண்டும் வோல்கா நதி பகுதிக்கே திருப்பி அனுப்ப வேண்டியது அவசியம்” என்று பேசினார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து நந்தகுமார் பாகல் மீது, ‘சர்வ பிராமணர்கள் சமாஜ்’ என்ற அமைப்பு டிடி நகர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தது. அதன் அடிப்படையில், சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகலின் தந்தை நந்தகுமார் மீது போலீஸார் கடந்த சனிக்கிழமை இரவு எப்ஐஆர் பதிவு செய்தனர். அவர் மீது 153ஏ (பல்வேறு சமூகத்தினருக்குள் பகைமையை உருவாக்குதல்), 505(1) (பி) (உள்நோக்கத்துடன் பயத்தை ஏற்படுத்துதல்) ஆகிய சட்டப் பிரிவுகளின் கீழ் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து நந்தகுமார் பாகலின் மகனும் சத்தீஸ்கர் முதல்வருமான பூபேஷ் பாகல் கூறியதாவது:
சட்டம் அனைவருக்கும் மேலா னது. சட்டத்துக்கு மேலானவர்கள் யாரும் இல்லை. அவர் 86 வயதான என் தந்தையாக இருந்தாலும், சட்டம்தான் பெரியது. சத்தீஸ்கர் அரசு அனைத்து மதம், பிரிவு, இனம், அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கிறது. ஆனால், குறிப்பிட்ட இனத்தவர்களுக்கு எதிராக எனது தந்தை பேசியது, மத நல்லிணக்கத்தை குலைப்பதாக உள்ளது. அவரது பேச்சால் நானும் வருத்தம் அடைந்தேன்.
நமது அரசியல் பார்வைகள் மற்றும் நம்பிக்கைகள் வேறு வேறானவை. ஒரு மகன் என்ற முறையில் நான் எனது தந்தைக்கு மரியாதை அளிக்கிறேன். ஆனால், சத்தீஸ்கர் மாநில முதல்வராக, அவரது தவறை மன்னிக்க இயலாது.
இவ்வாறு முதல்வர் பூபேஷ் பாகல் கூறினார்.