தமிழகம்

பிப்ரவரி 19ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: நாளை வேட்புமனுத் தாக்கல்

46views

தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் ஒரே கட்டமாக அடுத்த மாதம் 19ஆம் தேதி நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதற்கான வேட்புமனுத் தாக்கல் நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஏற்கனவே தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

21 மாநகராட்சிகளுக்கு உட்பட்ட ஆயிரத்து 374 வார்டு உறுப்பினர் பதவியிடங்கள், 138 நகராட்சிகளுக்கு உட்பட்ட 3,843 வார்டு உறுப்பினர் பதவியிடங்கள், மற்றும் 490 பேரூராட்சிகளுக்கு உட்பட்ட 7,621 வார்டு உறுப்பினர் பதவியிடங்கள் என மொத்தம் 12,838 பதவியிடங்களுக்கு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார், வேட்பு மனு தாக்கல் நாளை தொடங்கி, பிப்ரவரி 4ஆம் தேதி முடிவடையும் என்று தெரிவித்தார். 5ஆம் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனை நடைபெறும். வேட்புமனுக்களை திரும்பப் பெற 7ஆம் தேதி கடைசி நாள் என்றும் தெரிவித்தார்.

ஒரே கட்டமாக பிப்ரவரி 19ஆம் தேதி வாக்குப்பதிவும், பிப்ரவரி 22ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெற உள்ளதாக மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் கூறினார். மனுதாக்கல் – 28 ஆம் தேதி காலை 10 – மாலை 5 வரை பெறப்படும். வாக்க்குபதிவு பிப்ரவரி 19ஆம் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும். கடைசி ஒரு மணி நேரம் 5 மணிமுதல் 6 மணிவரை கொரோனா பாதிப்பு, அறிகுறி உள்ளோருக்கு அனுமதி. இந்தத் தேர்தலுக்காக சென்னை மாநகராட்சியில் 5,794 வாக்குச்சாவடிகள் உட்பட மொத்தம் 31,029 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. வெற்றி பெறும் உறுப்பினர்கள் பதவியேற்பதற்காக உள்ளாட்சி அமைப்புகளின் கூட்டம் மார்ச் 2ஆம் தேதி நடைபெறவிருக்கிறது.

அதனைத் தொடர்ந்து மார்ச் 4ஆம் தேதி மாநகராட்சி மேயர், துணை மேயர், நகராட்சித் தலைவர், துணைத்தலைவர், பேரூராட்சித் தலைவர், துணைத் தலைவர் என 1,298 பதவியிடங்களுக்கு மறைமுக தேர்தல் நடைபெற உள்ளது. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, தேர்தலின்போது, தெருமுனைக் கூட்டம் மற்றும் பேரணிகளுக்கு அனுமதியில்லை என்று மாநில தேர்தல் ஆணையர் கூறினார்.

இந்தத் தேர்தலில் மொத்தம் 2,79,56,754 பேர் வாக்களிக்க உள்ளனர். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மூலம் தேர்தல் நடைபெறுகிறது. மாற்றுத்திறனாளிகள் வாக்களிப்பதற்காக வாக்குச்சாவடிகளில் சக்கர நாற்காலி, சாய்வு தளம் உள்ளிட்ட வசதிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பழனிக்குமார் கூறியிருக்கிறார்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை கண்காணிக்க மாவட்டத்துக்கு, ஒரு ஐஏஎஸ் அதிகாரி தேர்தல் பார்வையாளராக நியமிக்கப்பட உள்ளார். சென்னை மாநகராட்சிக்கு மட்டும் 3 தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். வேட்புமனு தாக்கல் செய்தல், மனுக்களை ஆய்வு செய்தல், திரும்பப் பெறுதல், சின்னங்கள் ஒதுக்கீடு ஆகிய நிகழ்வுகளை சிசிடிவி மூலம் பதிவு செய்ய மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பதற்றமான வாக்குச்சாவடிகள் வெப் ஸ்ட்ரீமிங் மூலம் கண்காணிக்கப்பட உள்ளது, வெப் ஸ்ட்ரீம் இல்லாத சாவடிகள், சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட உள்ளன. இதைத்தவிர அனைத்து வாக்குச்சாவடிகளையும் சிசிடிவி மூலம் கண்காணிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தேர்தல் பணிகளுக்காக 640 தேர்தல் நடத்தும் அலுவலர், 1,644 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்தல் பாதுகாப்பு பணியில் 80 ஆயிரம் காவலர்களும், தேர்தல் பணியில் 1,33,000 அலுவலர்களும் ஈடுபடுத்தப்பட உள்ளதாக, மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் கூறினார்.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. தேர்தலில் பணபட்டுவாடாவை தடுக்க வருவாய்துறையினர், போலீஸ் அடங்கிய சிறப்பு பறக்கும் படை அமைக்கப்படும் என்று தமிழக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மாநகராட்சிகள், மாவட்ட எல்லைகளில் வாகன சோதனையை தீவிரப்படுத்துமாறு ஆட்சியர்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் உத்தர விட்டுள்ளது.

தேர்தல் நடவடிக்கைகள் முடியும் வரை 24 மணி நேரமும் வாகன சோதனையை மேற்கொள்ள வேண்டும் என்றும் பணம், பொருட்களை பறிமுதல் செய்யும் போது வீடியோ எடுத்து அதன் விவரங்களை உடனுக்குடன் அனுப்பி வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிகளின் படி தனி நபர் அதிக பட்சமாக 50 ஆயிரம் வரை கொண்டு செல்லலாம்.

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!