‘இரவின் நிழல்’ படத்தைப் பார்த்துவிட்டு பார்த்திபனைப் பாராட்டியுள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான்.
பார்த்திபன் இயக்கி, தயாரித்து, நடித்த படம் ‘ஒத்த செருப்பு’. படம் முழுவதும் பார்த்திபன் என்கிற ஒற்றைக் கதாபாத்திரம் மட்டுமே இடம் பெற்றிருந்தது. இந்தப் படம் விமர்சன ரீதியாகப் பெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும், சிறப்பு நடுவர் தேர்வுக்கான தேசிய விருதையும் வென்றது.
‘ஒத்த செருப்பு’ படத்துக்குப் பிறகு, சிங்கிள் ஷாட்டில் மொத்தப் படத்தையும் இயக்கி முடித்துள்ளார் பார்த்திபன். ‘இரவின் நிழல்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.
இந்தப் படத்தின் பணிகளை முடித்து, பின்னணி இசைக்காக ஏ.ஆர்.ரஹ்மானிடம் கொடுத்துவிட்டார் பார்த்திபன். தனது படத்தைப் பார்த்து ஏ.ஆர்.ரஹ்மான் பாராட்டியது குறித்து சமூக வலைதளப் பக்கத்தில் பார்த்திபன் கூறியிருப்பதாவது:
“என் ‘இரவின் நிழல்’-க்காக இன்று முதல் இசைப் புயல் இனியவர் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைக் கோர்ப்பு இனிதே தொடங்கியது. முழுப் படத்தை முதலில் பார்த்ததே ஆஸ்கர்தான். ‘இது சிங்கிள் ஷாட்டில் முதல் படம் மட்டுமல்ல முதன்மையான படமாகவும் இருக்கும், உதாரணப் படமாகவும் இருக்கும் இன்றைய இளைஞர்களுக்கு என்று உளமாரப் பாராட்டி கீ-போர்டில் விரல் ஓட்டினார் வைரல் ஆகப் போகும் ஒரு இசைப் பிரளயத்திற்காக!”.
இவ்வாறு பார்த்திபன் தெரிவித்துள்ளார்.
‘இரவின் நிழல்’ படத்துக்கு இடையே, அபிஷேக் பச்சன் நடித்துள்ள ‘ஒத்த செருப்பு’ படத்தின் இந்தி ரீமேக்கையும் பார்த்திபன் இயக்கி முடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.