பாகிஸ்தான் அணி மீது எப்போதுமே இந்திய கேப்டன் விராட் கோலிக்கு காதல் தான். அந்த அணியின் பந்துவீச்சாளர்கள் வீசும் பந்துகள் அனைத்தும் அவருக்கு அல்வா சாப்பிடுவது போல.
கோலியின் பழைய ரெக்கார்டுகளை புரட்டி பார்த்தால் பாகிஸ்தானுக்கு எதிராக மிகச்சிறப்பாக ஆடியிருப்பார். அந்த வகையில் தான் நேற்றைய உலகக்கோப்பை போட்டியும் அமைந்திருந்தது. மற்ற வீரர்கள் அனைவரும் பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களைப் பார்த்து அச்சப்பட, கோலியோ நின்று நிதானமாக அரைசதம் அடித்தார்.
இந்தியா நேற்று தோற்றுப்போனாலும் கோலியின் அரைசதமே பெரும் பேசுபொருளாகியிருக்கிறது. பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களில் அபாயகரமானவர் ஷாகீன் அப்ரிடி. இவர் தான் ராகுலையும் ரோஹித்தையும் சொல்லியடித்து வெளியேற்றினார். ஆனால் இவருடைய பந்தை அநாயசமாக ஸ்டிரைட் டிரைவில் ஒரு சிக்ஸர் பறக்கவிட்டு மிரட்டினார் கோலி. இந்த சிக்ஸ் இன்னும் கண்களுக்குள் நிற்பதாக இந்திய ரசிகர்கள் பூரித்துப்போய் சொல்கின்றனர்.
49 பந்துகளை சந்தித்த விராட் கோலி 5 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 57 ரன்களை விளாசினார். இதன்மூலம் மாபெரும் சாதனையைப் புரிந்துள்ளார். டி20 உலகக்கோப்பை தொடரில் அதிக முறை அரைசதம் அடித்த வீரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். முன்னதாக வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ் கெயில் 9 அரைசதத்துடன் முதலிடத்தில் இருந்தார். கிங் கோலி அவருடன் அந்த இடத்தைப் பகிர்ந்திருந்தார். நேற்று கெயிலின் சாதனையை முறியடித்து கோலி முதலிடத்திற்கு முன்னேறினார்.