இந்தியா

பவானிபூர் இடைத்தேர்தல்: மம்தா வேட்புமனு தாக்கல்

45views

மேற்கு வங்கத்திலுள்ள பவானிபூர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் மாநில முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி வெள்ளிக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தார்.

கடந்த மார்ச்-ஏப்ரல் மாதங்களில் மேற்கு வங்கத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட மம்தா பானர்ஜி தோல்வியடைந்தார். எனினும் திரிணமூல் காங்கிரஸ் தேர்தலில் வெற்றி பெற்றது. இதையடுத்து, மாநில முதல்வராக மம்தா பதவியேற்றுக் கொண்டார். அவர் முதல்வர் பதவியைத் தக்கவைத்துக் கொள்ள நவம்பர் 5-ஆம் தேதிக்குள் கட்டாயம் எம்எல்ஏவாக வேண்டும்.

இந்நிலையில், அந்த மாநிலத்திலுள்ள 3 தொகுதிகளில் செப்டம்பர் 30-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று அண்மையில் தேர்தல் ஆணையம் அறிவித்தது. வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 3-ஆம் தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது. இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் ஒன்றான பவானிபூரில் மம்தா பானர்ஜி போட்டியிடுகிறார். அதற்கான வேட்புமனுவை அவர் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்தார்.

அவரை எதிர்த்து பவானிபூர் தொகுதியில் பாஜக சார்பில் வழக்குரைஞரான பிரியங்கா டிப்ரேவால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் ஸ்ரீஜிப் பிஸ்வாஸ் போட்டியிடுகின்றனர்.

பாஜகவுக்கு எதிராக தேசிய அளவில் கூட்டணி அமைக்க காங்கிரஸ் திட்டமிட்டு வருகிறது. அந்தக் கூட்டணியில் மம்தா பானர்ஜியும் இடம்பெறக் கூடும் என்று நம்பப்படுகிறது. எனவே, அவருக்கு எதிராக பவானிபூர் இடைத்தேர்தலில் தங்கள் வேட்பாளரை நிறுத்த வேண்டாமென காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.

பவானிபூர் தொகுதி திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏ சோபன்தேவ் சட்டோபாத்யாய ஏற்கெனவே தனது பதவியை ராஜிநாமா செய்துவிட்டார்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!