தமிழகம்

பழனிசாமி அப்பீல் வழக்கு: ஆக.,22ல் விசாரணை?

60views
கடந்த மாதம் 11ம் தேதி கூட்டிய பொதுக்குழு செல்லாது என்ற தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து, இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி தாக்கல் செய்த மேல்முறையீடு மனு, வரும் 22ல் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜூலை 11ல், பழனிசாமி தரப்பு கூட்டிய பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக் கோரி, கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து தாக்கல் செய்த மனுக்களை, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் விசாரித்தார்.
அவரது உத்தரவில், ‘பழனிசாமி தரப்பு ஜூலை 11ல் கூட்டிய பொதுக்குழு செல்லாது; ஜூன் 23க்கு முந்தைய நிலை தொடரும்.’ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமியின் ஒப்புதல் இன்றி, நிர்வாக குழு அல்லது பொதுக்குழு கூட்டத்தை கூட்ட முடியாது’ என கூறியிருந்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து, இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி, மேல்முறையீடு செய்தார்.தனி நீதிபதி உத்தரவின் சான்றளிக்கப்பட்ட நகல் இன்றி, மேல்முறையீட்டு மனுவுக்கு எண் வழங்கி, விசாரணைக்கு பட்டியலிடக் கோரி, பழனிசாமி தாக்கல் செய்த கூடுதல் மனு, வரும் 22ம் தேதி, நீதிபதிகள் எம்.துரைசாமி, சுந்தர் மோகன் அமர்வில், விசாரணைக்கு வருகிறது. கூடுதல் மனு மீது உத்தரவு பிறப்பித்து, அன்றே மேல்முறையீட்டு மனுவையும் விசாரணைக்கு எடுக்கலாம். அது, நீதிபதிகளின் முடிவைப் பொறுத்தது.
இதற்கிடையில், தங்கள் தரப்பை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது என கோரி, ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் தரப்பில், ‘கேவியட்’ மனுவை, வழக்கறிஞர் பி.ராஜலட்சுமி தாக்கல் செய்துள்ளார்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!