ஹிஜாப் வழக்கு கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ரிது ராஜ் அவஷ்தி, நீதிபதிகள் ஜே.எம்.காஷி, கிருஷ்ணா தீக் ஷித் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.
முதல் கட்டமாக இரு தரப்பு வாதங்களையும் கேட்ட பின்னர் தலைமை நீதிபதி ரிது ராஜ் அவஷ்தி, ‘இவ்வழக்கில் தீர்ப்பு வெளியாகும் வரை பள்ளி, கல்லூரி ஆகிய கல்வி நிலையங்களில் ஹிஜாப், காவித் துண்டு உள்ளிட்ட மத ரீதியான உடைகள் அணிய தடை விதிக்கப்படுகிறது. மாணவர்கள் சீருடை மட்டுமே அணிந்து வர வேண்டும். மாணவர்களின் கல்வியை பாதிக்கும் வகையில் போராட்டங்கள் நடத்தக்கூடாது. இவ்வழக்கு தொடர்பாக வரும் திங்கட்கிழமை விசாரணை நடத்தப்படும்’ என்று கூறி வழக்கை ஒத்திவைத்தார்.
இதனிடையே ஹிஜாப் தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றம் 9 நீதிபதிகள் அடங்கிய அமர்வின் மூலம் விசாரிக்க வேண்டும் என மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் நேற்று உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டார். அதற்கு தலைமை நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான அமர்வு, ‘இவ்வழக்கை கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி தலைமையிலான கூடுதல் அமர்வு விசாரிக்கிறது. அந்த அமர்வு வழக்கில் முடிவை எட்டட்டும்.
உச்ச நீதிமன்றத்தில் அந்த வழக்கை பட்டியலிட்டால் கர்நாடக உயர் நீதிமன்றம் வழக்கை விசாரிக்காது. எனவே கர்நாடக உயர்நீதிமன்றமே விசாரிக்கட்டும். ஒருவேளை தேவைப்பட்டால் ஹிஜாப் வழக்கை விசாரிக்க பட்டியலிடுவது குறித்து பரிசீலிப்போம்’ என்றார்.