இந்தியா முழுவதுமுள்ள, குறிப்பாக மும்பையில் உள்ள ரயில்வே, பருவமழையை எதிர்கொள்ள முழுவதும் தயாராக வேண்டும் என்று மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
மழைக் காலத்தை எதிர்கொள்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மும்பை புறநகர் ரயில்வேயில் எடுப்பது குறித்த ஆய்வுக் கூட்டத்தில் நேற்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பங்கேற்றார். பாதிக்கப்படக்கூடிய பகுதிகளின் தற்போதைய நிலை, ரயில்கள் சுமுகமாக இயங்குவதற்கான திட்டங்களை ஆய்வு செய்தார்.
அப்போது மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கூறுகையில், ”இந்தியா முழுவதுமுள்ள, குறிப்பாக மும்பையில் உள்ள ரயில்வே பருவமழையை எதிர்கொள்ள முழுவதும் தயாராக வேண்டும். பருவமழையின்போது மும்பைவாசிகளுக்கு எந்தவிதமான அசவுகரியமும் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்ய ரயில்வே உறுதி பூண்டுள்ளது.
பருவமழையை எதிர்கொள்வதில் ரயில்வேயின் தொழில்நுட்ப மற்றும் சிவில் பணிகளின் செயல்திறனை ஆய்வு செய்வதற்காக ஐஐடி மும்பை போன்ற நிறுவனங்களுடன் ரயில்வே துறை கோகோக்க வேண்டும். ரயில்களின் பாதுகாப்பு மற்றும் தடையில்லா இயக்கத்தை உறுதி செய்வதற்காக புதுமைகளும், கடின உழைப்பும் இணைய வேண்டும்.
பொதுமுடக்கத்தின் போது 2,10,000 க்யூபிக் மீட்டர்கள் புறநகர் ரயில் பிரிவு பகுதிகள் தூய்மைப்படுத்தப்பட்டன. வெள்ள பாதிப்பு ஏற்படும் பகுதிகள் கண்டறியப்பட்டு, தேவையான தீர்வுகள் வகுக்கப்பட்டன.
இந்திய வானிலைத் துறையுடன் இணைந்தும், தனிப்பட்ட முறையிலும் தானியங்கி மழை மானிகள் மேற்கு ரயில்வேயால் நிறுவப்பட்டுள்ளன. நீரேற்றி இயந்திரங்களின் எண்ணிக்கை 33 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஆய்வுக்காக ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டு, வாய்க்கால்களைச் சீரமைக்க நவீன இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. நீர் தேங்குவதைக் கட்டுப்படுத்துவதற்காக நவீன முறையில் கால்வாய்கள் கட்டமைக்கப்பட்டன” என்று தெரிவித்தார்.