கவிதை

பயணங்கள்

179views
வாழ்வியல் பயணத்தில் வசந்தமும் வருத்தமும்
ஊழ்விணையால் வந்ததல்ல உண்மையை உணர்ந்திடுவீர்
தாழ்விலா சிந்தையே தரணியில் உயர்த்துமே
சூழ்நிலை யாவையுமே சுற்றமாய் சூழுமே
குற்றங்கள் களைந்தே குவலயத்தில் உயர்வோம்
முற்றத்தில் முடங்கிடும் முடிவல்ல வாழ்க்கை
உற்றநல் பாதையில் உயர்ந்திட எண்ணியே
கற்றநல் மாந்தரே களிப்புடன் பயணிப்பீர்
ஆற்றிடும் பணிக்காக அயல்நாடு பயணித்தீர்
போற்றிடும் தேசத்தை பொய்யென்று சொல்லாதீர்
நாற்றிட்ட வயலுக்குள் நல்லுழவர் பயணமெல்லாம்
வற்றிடா நீராலே வளம் பெறலாகுமே
பள்ளியெனும் சோலைக்குள் பாங்காக பயணிக்கும்
துள்ளிவரும் கிள்ளைகள் துவலாமல் பயணிக்க
அள்ளிதரும் ஆசானின் அன்பான கல்வியை
சொல்லிதரும் வேளையில் சோர்வின்றி கற்றிடவே
பயணங்கள் சிறக்குமே பருவங்கள் செழிக்குமே
தயங்காமல் நடைபயின்று தடையெலாம் தகர்த்திடவே
உயரத்தைத் தொட்டிடலாம் உலகத்தை வென்றிடலாம்
பயணத்து பாதையெல்லாம்
பண்போடு நடைபோட
வான்வெளியை ஆண்டிடலாம் வானவில்லை ரசித்திடலாம்
மண்ணெல்லாம்‌ மாசின்றி மதமென்ற தூசின்றி
பொன்னான சிந்தையினால் பொலிவற்ற சாதியத்தை
மண்ணோடு மாய்த்திட்டால் மகிழ்வாகும் பயணங்களே
இளங்காலை வேளையில் இரவியின் பயணமே
நலமாக துவங்குமே நல்விடிய லாகுமே
வளமான வையத்தை ஒளியாலே நிரப்பியே
நிலங்காக்கும் கதிரவனின் நெடும்பயணம் சிறக்குமே..
  • கோ.பூமணி

( நான் -FM ல் ஞாயிற்றுக் கிழமைகளில் ஒளிபரப்பாகும் “ரமணி ராஜ்ஜியம்” நிகழ்ச்சியில் 30-01-2022 அன்று தெருவே செய்யப்பட்ட கவிதை.)

Right Click & View Source is disabled.

error: Content is protected !!